பின்னலாடை துறையினர் கடன் பெறுவதை எளிமைப்படுத்த பிரதமருக்கு டீமா சங்கம் சார்பில் கடிதம்

திருப்பூர், ஜூன் 12: ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதை எளிமைப்படுத்த கோரி ஒன்றிய பிரதமருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ஜவுளி மற்றும் ஆடை தொழில் ஏற்கனவே எரிபொருள், மின்சாரம் மற்றும் நூல் விலைகளின் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஆடைகளின் விலை மற்றும் விற்பனை விலையை அதிகரிக்கிறது. இதனால் சீனா, பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளின் போட்டியாளர்கள் வழங்கும் மலிவான விலையுடன் உலக அளவில் போட்டியிட முடியவில்லை. ஆனால், இப்போது அமெரிக்கா நம்முடைய போட்டி நாடுகளுக்கு வரிகளை உயர்த்தி இருப்பது இந்திய ஆடை உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இந்தியா ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் வரியில்லா வர்த்தகத்தில் கையெழுத்துட்டுள்ளது. மேலும் 24 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க செய்யும் என நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில், ஏற்றுமதியாளர்கள் ஆர்டரை பெற்றாலும், செயல்பாட்டு மூலதனப் பற்றாக்குறை ஏற்படுகிறது. சப்ளையர்களுக்கு 45 நாட்களுக்கு முன்பு பில் செலுத்த வேண்டும் என்ற கடுமையான விதிமுறை வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், மறுபுறம் வர்த்தக சுழற்சி நேரம் சுமார் 2 மாதங்கள் என்பதால், வாங்குபவர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை அடைவது கடினமாகிறது. இதனை சமாளிக்க, உறுதிப்படுத்தப்பட்ட ஆர்டர்கள் அல்லது கடன் கடிதம் உள்ளிட்டவற்றை ஆதாரமாக கொண்டு எந்தவொரு பிணைய பாதுகாப்பையும் வலியுறுத்தாமல், இசிஜிசி காப்பீட்டுத் திட்ட உத்திரவாதத்தை கொண்டு வங்கிகள் கடன் வழங்க முன்வரும் பட்சத்தில் ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி ஆர்டர்களை செய்து முடிப்பது சாதகமாக இருக்கும்.

இதன் விளைவாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்க பெறலாம். இது பல தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. இந்த வாய்ப்புகள் வழங்கப்படும் பட்சத்தில் ஏற்றுமதிகளை அதிகரிக்க செய்யலாம். மேலும் உலக சந்தையில் நமது சந்தை பங்கு அதிகரித்து விரைவில் முதலிடத்தை அடையும், மேலும், சிவில் மதிப்பீட்டில் கடன் காப்பீட்டு நிறுவனங்கள் 800 புள்ளிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதனை குறைந்தபட்ச புள்ளிகளாக 550 அல்லது அதற்கு மேல் குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post பின்னலாடை துறையினர் கடன் பெறுவதை எளிமைப்படுத்த பிரதமருக்கு டீமா சங்கம் சார்பில் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: