கூலி உயர்வு வழங்காததை கண்டித்து அவினாசியில் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்

பல்லடம், ஜூன் 12: கூலி உயர்வு வழங்காததை கண்டித்து அவினாசியில் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்லடத்தில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் காரணம்பேட்டை பூபதி கூறியதாவது:கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இதற்கிடையே உற்பத்தி செய்யும் காடா துணிக்கு கூலி உயர்வு வழங்காததால் விசைத்தறியாளர்கள் தொழிலை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதையடுத்து அமைச்சர்கள், கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சோமனுார் ரகத்துக்கு 15 சதவீதம், பல்லடம் ரகங்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூலி உயர்வு ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கூலி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி அவினாசியில் வரும் 16ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால், மீண்டும் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post கூலி உயர்வு வழங்காததை கண்டித்து அவினாசியில் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: