கரூர், ஜூன் 12: கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் மக்கள் சந்திப்பு முகாம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. முகாம் குறித்து கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளதாவது: பள்ளிக் கல்வித்துறை மூலம் கல்வி இடைநிலை நிற்றலை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம் சமூக வளர்ச்சி மேம்பாடு அடைவதுடன் தனி மனித பொருளாதார வளர்ச்சியும் அடைய முடியும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் உணர்ந்து தங்களது குழந்தைகளை குறைந்தபட்சம் உயர்கல்வி வரை முழுமையாக படிக்க வைப்பதை உறு செய்ய வேண்டும். மேலும், தொடர்ந்து, உயர்கல்வி கற்பதன் மூலம் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாதாந்திர நிதி உதவி பெறலாம். மேலும், உயர்கல்வி பயிலவுள்ள மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 9566566727 தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
பொதுமக்களிடம் மக்களை தேடி முதல்வர் திட்டத்தின் கீழ் 3 கட்டங்களாக மனுக்கள் பெறப்பட்டு 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட கல்வி கற்கும் மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து, வருவாய் துறை சார்பில் 84 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல், பட்டா மாறுதல், விதவை சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று, வாரிசு சான்று, சாதி சான்று, சொத்து மதிப்பு, இதர சான்றுகளையும், சுகாதார துறையின் சார்பாக 10 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 58,075 மதிப்பில் உதவி உபகரணங்களையும், தொழிலாளர் உதவி ஆணையர் மூலம் இயற்கை மரண உதவி தொகையாக ரூ. 1 பயனாளிக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவியும், இதனைத்தொடர்ந்து, 3 பயனாளிகளுக்கு ரூ. 26 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதி உதவி, 3 பயனாளிகளுக்கு ரூ. 62 ஆயிரம் இயற்கை மரண உதவி, கூட்டுறவுத்துறை சார்பாக 33 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 31.45 லட்சம் மதிப்பில் கடனுதவி,
20 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடன் ரூ. 20.97 லட்சம் மதிப்பிலும், 2 பயனாளிகளுககு ரூ. 2.42 லட்சம் மதிப்பில் மீன் விற்பனை கடனுதவிகளும், தோட்டக்கலைத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ. 27.034 மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 9,594 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 182 பயனாளிகளுக்கு ரூ.88 லட்சத்து 66 ஆயிரத்து 244 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குளை கலெக்டர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சாந்தி, தாட்கோ மாவட்ட மேலாளர் இளங்கோ, குழந்தை பாதுகாப்பு அலுவலர் பிரியா உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் மக்கள் தொடர்புதிட்ட முகாம்; 182 பயனாளிகளுக்கு ரூ.88.66 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.