பெரம்பலூர், ஜூன் 12: வீட்டு பணியாளர்கள், பெண் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்டோரை நல வாரியங்களில் பதிவு செய்து இணைக்க சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, 18 நல வாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம், முடக்கு ஓய்வூதியம், புதிய ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொழிலாளர் ஆணையர் உத்தரவுப்படி, வீட்டு பணியாளர்கள், பெண் ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் இணையம் சார்ந்த தொழிலாளர்கள் ஆகியோரை, நலவாரியங்களில் பதிவு செய்து இணைக்க, அவர்களுக்கான சிறப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5-மணி வரை தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் நடைபெறும். இந்த சிறப்பு முகாம் மூலமாக பயன்பெற விரும்பும் உறுப்பினர்கள் தங்களின் அசல் ஆவணங்களான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், ஓட்டுநர் உரிமம் மற்றும் புகைப்படம் எடுத்து வந்து பதிவு செய்து பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்வது முற்றிலும் இலவசமாகும்.
தற்போது தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பெரம்பலூர் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட விளையாட்டு மைதானம் அருகிலுள்ள, ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் உள்ள, பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம்.
The post நாளை நடக்கிறது: நலவாரியங்களில் பதிவு செய்ய சிறப்பு முகாம் appeared first on Dinakaran.