திருமயம், ஜூன் 12: அரிமளம் பகுதியில் மின்தடை அறிவித்த நேரத்தைவிட கூடுதலாக மின்நிறுத்தம் செய்யப்பட்டதால், பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழ்நாடு மின்சாரம் வாரியம் துணை மின் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்களைக் கொண்டு மாதாந்திர பராமரிப்பு அல்லது அவசரகால பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு பராமரிப்பு பணி தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் எந்தெந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனகுறிப்பிட்டு, மின்சாரம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு செய்வர். அதேபோல், நேற்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணி என அறிவிப்பு செய்து, பராமரிப்பு பணிகள் மேற்கொண்டனர். அதனால், அரிமளம் பகுதியில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. ஆனால், அறிவித்தபடி, மாலை 4 மணி முதல் பொதுமக்கள், வியாபாரிகள் பராமரிப்பு பணிகள் முடிந்து மின்சாரம் வழங்கப்படும் என காத்திருந்தனர். ஆனால், மாலை 7 மணி வரை மின்சாரம் வழங்கப்படாததால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் துணை மின் நிலையத்திலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரத்திற்குள் மிகாமல் பராமரிப்பு பணியை முடித்து மின் விநாயகம் வழங்கப்படும் என பொதுமக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அவ்வாறு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படும் போது வியாபாரிகள் கடைகளில் விற்பனைக்காக வைத்திருக்கும் பால் பொருட்கள், ஐஸ்கிரீம், காய்கறி உள்ளிட்டவைகளை பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதே போல் ஹோட்டல்களில் சமையலுக்கு தேவையான பொருள்கள் பதப்படுத்தி வைத்திருக்கும் பட்சத்தில் மின்சாரம் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படும் போது பெரிய அளவில் இழப்பு ஏற்படுவதோடு ஹோட்டல் சமையல்களும் செய்ய முடிவதில்லை. இதனால் வியாபாரிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இதேபோல் இல்லத்தரசிகளும் பிரிட்ஜில் வைத்திருக்கும் பொருட்களை பாதுகாக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
The post அரிமளம் பகுயில் பராமரிப்பு பணிக்காக இரவு 7 மணி வரை மின்தடை appeared first on Dinakaran.