தஞ்சாவூர், ஜூன் 12: தஞ்சையை அடுத்துள்ள கரந்தையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசுவாமி கோவில் என்கிற வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இத்தலம் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில் ஒன்றாகும். மேலும், தேவார பாடல் பெற்ற வைப்பு தலமாகவும் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மகோற்சவ பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் (மே) 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் மாலை படிச்சட்டத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடை பெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஏழூர் பல்லக்கு புறப்பாடு நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன் உடனாகிய கருணாசுவாமி என்கிற வசிஷ்டேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட பெரிய கண்ணாடி பல்லக்கிலும், மணக்கோலத்தில் அருந்ததிதேவி உடனுறை வசிஷ்டமகரிஷி சிறிய வெட்டிவேர் பல்லக்கிலும் எழுந்தருளினர். தொடர்ந்து, சுவாமிகளுக்கு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், சிவ வாத்தி யங்கள், மேளதாளங்கள் முழங்க கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கை பக்தர்கள் தோளில் சுமந்தபடி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். பின்னர், கோவிலின் முன் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் பல்லக்குகள் சப்தஸ்தான தலங்களான வசிஷ்டேஸ்வரர் கோவில் (கரந்தை), தஞ்சபுரீஸ்வரர் கோவில் (வெண்ணாற்றங்கரை), வசிஷ்டேஸ்வரர் கோவில் (திருதென்குடி திட்டை), சொக்கநாதர் கோவில் (கூடலூர் திருக்கூடலம்பதி), ராஜராஜேஸ்வரர் கோவில் (கடகடப்பை), கைலாசநாதர் கோவில் (திருப்புன்னை நல்லூர்), பூமாலை வைத்தியநாதர் கோவில் (கீழவாசல்) ஆகிய 7 ஊர்களுக்கு புறப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இந்த பல்லக்குகள் இன்று (வியாழக்கிழமை) மாலை கரந்தை கோவிலை அடைந்ததும் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் சத்யராஜ், கண்காணிப்பாளர் ரவி மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
The post வைகாசி விசாகப் பெருவிழாவை ஒட்டி கரந்தை கருணாசுவாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு appeared first on Dinakaran.