33,312 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,134.21 கோடி வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் திட்டம்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்


சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 33,312 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,134.21 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாடு முழுவதும் 33,312 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 3,76,443 உறுப்பினர்களுக்கு ரூ.3,134.21 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்குவதை துவக்கி வைக்கும் வகையில், சென்னையில் செயல்படும் 1,401 சுய உதவிக் குழுக்களின் 14,083 உறுப்பினர்களுக்கு ரூ.123.65 கோடிக்கான வங்கி கடன் இணைப்புகளை வழங்கினார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் 20 சுய உதவிக் குழுக்களுக்கு விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகள், 5 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு விருது மற்றும் தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகள், 5 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு கூட்டமைப்புகளுக்கு விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகள், 3 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு விருது மற்றும் தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகள், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரெட்டியார் சத்திரம் வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சேலம் மேற்கு சூரமங்கலம் நகர அளவிலான கூட்டமைப்பிற்கு விருது மற்றும் தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலைகள் என மொத்தம் 35 சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு 2024-2025ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுகள் மற்றும் விருது தொகையாக மொத்தம் ரூ.59 லட்சத்துக்கான காசோலைகளையும் துணை முதல்வ வழங்கினார்.

தொடர்ந்து, 9.4.2025 அன்று சென்னை நேரு பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் பன்முக கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற 20 சுய உதவிக் குழுக்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகையாக மொத்தம் ரூ.2.75 லட்சம் காசோலைகளை வழங்கினார். இந்த விழாவில், சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களுக்காக புதியதாக வடிவமைக்கப்பட்ட ‘மதி இலட்சினையை’ வெளியிட்டு, சுய உதவிக் குழுக்களால் தரமான முறையில் தயாரிக்கப்பட்ட ‘செக்கு கடலை எண்ணெய்யை’ பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.

விழாவில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி சிங், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, சரண்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள், சுய உதவிக்குழு மகளிர் கலந்து கொண்டனர்.

‘விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை’
தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த வாரமே நடைபெற வேண்டியது. எனக்கு உடல்நிலை சரியில்லாததால் இந்த வாரம் நடத்தப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது.

அதற்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று மட்டும் ரூ.3,120 கோடி வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். தேதியும் அறிவிக்கப்படும். சென்ற முறை எப்படி சரியாக வழங்கப்பட்டதோ அதேபோல இந்த முறை விடுபட்டவர்களுக்கு நிச்சயமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post 33,312 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,134.21 கோடி வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் திட்டம்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: