சென்னை: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, வரும் 27ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. நடப்பாண்டு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 7ம் தேதி தொடங்கி ஜூன் 6ம் தேதியுடன் நிறைவடைந்தது. www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர். மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 பேர் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பத்திற்கான கட்டணத்தையும், 2 லட்சத்து 26 ஆயிரத்து 359 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர். மேலும், விண்ணப்ப பதிவு செய்த மாணாக்கர்கள் தங்களது சான்றிதழ்களை ஜூன் 9ம் தேதி வரை பதிவேற்றம் செய்து வந்தனர்.
ஏற்கனவே அறிவித்தபடி, மாணவர்களுக்கு ஜூன் 11ம் தேதி (நேற்று) ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை மாணவர்கள் இணையதள பக்கத்தில் லாக் இன் செய்து பார்த்துக்கொள்ளலாம். இதை தொடர்ந்து, ஜூன் 20ம் தேதி வரை அவர்களின் சான்றிதழ்கள் இணையவழியில் சரிபார்க்கப்படும். இப்பணி முடிந்து ஜூன் 27ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும். பின்னர் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். இதையடுத்து விருப்பமான கல்லூரி மற்றும் பாட பிரிவைத் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்படும். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அவர்களின் விளையாட்டுச் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ஜூன் 2ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணி நாளை வரை நடைபெறும். இவர்களுக்கான கால அட்டவணை விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், குறுந்தகவல் மூலம் ஒவ்வொருவருக்கும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. பி.ஆர்க். படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இம்மாத இறுதியில் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளதால், இந்த படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றங்களை வரும் 30ம் தேதி வரை மேற்கொள்ளலாம். பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பொறியியல் மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் 27ம் தேதி வெளியீடு appeared first on Dinakaran.