சென்னை: தேமுதிக சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதற்காக சென்னையில் 4 நாட்கள் மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நேற்று தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டம், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதை தொடர்ந்து, பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது: ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நானும் விஜய பிரபாகரனும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம். ஜனவரி 9ம்தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடக்கிறது. தமிழ்நாட்டில் தேமுதிக தனித்து போட்டியிட முடியும் என்பதை நிரூபித்தவர் விஜயகாந்த். தேமுதிக தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணியில் இணைந்து போட்டியா என்பது குறித்து இப்போது பதில் கூற முடியாது.
இதற்கு காலம்தான் பதில் ெசால்லும். தனித்து போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வந்தால் நிச்சயமாக நாங்கள் அதற்கு பயந்தவர்கள் இல்லை. 2026ல் ராஜ்யசபா சீட்டு வழங்கப்படும் என்பதையும் அவர்கள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் 5 சீட் அறிவித்த போதே ராஜ்யசபாவும் அறிவிக்கப்பட்ட ஒன்று தான். ஆனால் அதில் ஆண்டு குறிப்பிடவில்லை. அதை கேட்டபோது, ஆண்டு குறிப்பிடுவது வழக்கத்தில் இல்லை என்று சொன்னார்கள். எழுத்துப்பூர்வமாக தருவதை விட வார்த்தைதான் முக்கியம் வார்த்தை கொடுத்தால் மாற்ற மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதி கொடுத்தார். இப்போது, இந்த முறை இல்லை 2026ல் ராஜ்யசபா என்று கூறியுள்ளார். இப்பவே உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் ராஜ்யசபா சீட் வழங்குவதாக கையெழுத்து போட்டு கொடுத்தார்.
பிறகு ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. அது எங்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. அதை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எங்களிடம் தொலைபேசி வாயிலாக பேசி வேறு ஏதோ பதற்றத்தில் பேசி விட்டார் என்று தெரிவித்தனர். நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்பதால் அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்த வாக்குறுதி கடிதத்தை வெளியிட வேண்டிய சூழல் வரும். ஆனால், அரசியல் நாகரிகம் கருதி அவர் கையெழுத்து போட்ட அந்த கடிதத்தை நாங்கள் வெளியிடவில்லை. கூட்டணி குறித்து முடிவு செய்ய கால அவகாசம் உள்ளது. இந்தியா கூட்டணியில் இணைய செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்ததற்கு அவருக்கு நன்றி. திமுக அழைத்தால் கூட்டணிக்கு செல்வீர்களா என்கிறீர்கள். அந்த காலம் வரும் போது அதற்கான பதிலை சொல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்ட கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடவில்லை.
The post கூட்டணி குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது; தேமுதிக தனித்து போட்டியிடவும் தயங்காது: மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்கு பின்பு பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.