பயிர்களுக்கு நடுவில் முளைத்த களைச்செடி; விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அதிமுக: பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: பயிர்களுக்கு நடுவில் முளைத்த களைச்செடிகள்தான் அதிமுக. தோளில் பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல. விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சி பச்சை துரோகம் செய்தது என்று பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் முதல்வரை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காரில் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளியில் திருப்பூர் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான க.செல்வராஜின் மகள் செந்தமிழ்-யோகேஷ் கண்ணா திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து பெருந்துறை புறப்பட்டு சென்றார். பெருந்துறை விஜயமங்கலம் அருகே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்டல அளவிலான 2 நாள் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். கண்காட்சியில் அரசு மற்றும் தனியார் துறை சார்பில் 218 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் ரூ.159.52 கோடி மதிப்பிலான 11 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.15.70 கோடி மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 4,533 பயனாளிகளுக்கு ரூ.26 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மொத்தம் ரூ.177 கோடி மதிப்பிலான திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசியதாவது: டெல்டா பாசனத்திற்கான தண்ணீரை நாளைய தினம் (இன்று) மேட்டூர் அணையிலிருந்து நான் திறந்து வைப்பதற்கு முன்னால், மேற்கு மண்டல வேளாண் பெருங்குடி மக்களான உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயிகளால்தான் இந்த மண்ணும், மக்களும் மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு உணவுப் பொருள்கள் கிடைத்து உடல் வலிமையோடு வாழ்கிறார்கள்.

தமிழ்நாட்டின் வேளாண் பெருமக்கள் எல்லோரும் வாழ்வாங்கு வாழ்க என்று இந்த ஈரோடு மண்ணிலிருந்து ஈர உணர்வோடு நான் வாழ்த்துகிறேன். ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதல் வேலையாக வேளாண்மைத் துறை என்று சொல்லாமல், உழவர் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று வேளாண்மை – உழவர் நலத்துறை என்று பெயரை மாற்றினோம். அந்த மாற்றத்திற்கேற்ப உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களையும் வகுத்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். தமிழ்நாடு வரலாற்றில், முதல்முறையாக வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளில், உணவு தானிய உற்பத்தியில் 458 லட்சம் மெட்ரிக் டன் எட்டியிருக்கிறோம். 2020-21-ம் ஆண்டில், ஹெக்டேருக்கு 2 ஆயிரத்து 235 கிலோவாக இருந்த உணவு தானிய பயிர்களின் உற்பத்தித் திறன் 2024-25-ம் ஆண்டில், 2 ஆயிரத்து 871 கிலோவாக அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கூட்டுறவுத்துறை மூலம் ரூ.62 ஆயிரத்து 352 கோடி பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடனாக 81 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு 26 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டு, இதுவரை 1 லட்சத்து 84 ஆயிரம் இணைப்புகள் ரூ.2 ஆயிரத்து 184 கோடி செலவில் வழங்கப்பட்டிருக்கிறது. இலவச மின்சாரத்திற்கு மட்டும் இதுவரை மொத்தம் ரூ.26 ஆயிரத்து 223 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட கூடுதலாக, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 105 ரூபாயும், பிற ரகங்களுக்கு 130 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, ஒன்றிய அரசு அறிவித்த ஆதார விலையான ஒரு டன்னுக்கு ரூ.3 ஆயிரத்து 151க்கு மேல், 349 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்குகிறோம். இப்படி விவசாயிகளுக்கு பார்த்து பார்த்து செய்வதால்தான், வேளாண்மையும் பெருகியிருக்கிறது. உழவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அகில இந்திய அளவில் பயிர் உற்பத்தித் திறனில், தமிழ்நாடு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. சிறுதானியங்கள், கேழ்வரகு, எள் மற்றும் துவரை உற்பத்தியில் முதலிடம். மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு உற்பத்தியில் 2ம் இடம். குறு தானியங்கள் மற்றும் நிலக்கடலையில் மூன்றாம் இடம். மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு செயல்படுத்தினோம். தானியங்கள், காய்கறிகள், பழங்கள் விளைவிப்பதை ஊக்கப்படுத்தும் இந்த திட்டத்தில் 20 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில், 21 லட்சம் விவசாயிகளுக்கு ஆயிரத்து 630 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 720 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கியிருக்கிறோம்.

கடந்த கால அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட 125 உழவர் சந்தைகளை புதுப்பித்துள்ளதோடு, 14 புதிய உழவர் சந்தைகளையும் உருவாக்கியிருக்கிறோம். தோளில் பச்சை துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது. உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாக துணை நிற்பவர்கள் நாங்கள்தான். வளமான நிலங்களிலும், பயிர்களுக்கு நடுவில் களைகள் முளைக்கும் என்பது விவசாயிகளான உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்ட களையாகத்தான் கடந்த அதிமுக ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது. ஒவ்வொரு விஷயத்திற்கும் நீங்கள் எப்படியெல்லாம் போராடினீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். இன்றைக்கு அந்த நிலைமை மாறியிருக்கிறது. கடந்த ஆட்சியில், விவசாயிகளின் தற்கொலை அதிகமானது. உழவர்களின் உரிமையைப் பறிக்க முயன்ற 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் வெயிலிலும், மழையிலும் விவசாயிகள் போராடி அடக்குமுறையை எதிர்கொண்டபோது, கூச்சமே இல்லாமல் அந்த சட்டங்களை ஆதரித்துப் பேசி, பச்சை துரோகம் செய்தவர்கள் அதிமுக அரசு.

அதனால் தான் நீங்கள் தேர்தலில் தோற்கடித்தீர்கள். வேளாண் பெருங்குடி மக்களான உங்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், அதுபோன்ற களைகள், நாட்டிலிருந்து மொத்தமாக களையப்பட வேண்டும். உழவர் பெருங்குடி மக்களான உங்களுக்கு இன்னும் பல திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் வர இருக்கிறது. மீண்டும் நம்முடைய திராவிட மாடல் 2.O ஆட்சிதான் அமையும். அதற்கு, உழவர்களைக் காக்கும் இந்த அரசுக்கு உழவர் பெருமக்கள் அனைவரும் உற்ற துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

 தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளில், உணவு தானிய உற்பத்தியில் 458 லட்சம் மெட்ரிக் டன் எட்டியிருக்கிறோம்.
 தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டு, இதுவரை 1 லட்சத்து 84 ஆயிரம் இணைப்புகள் ரூ.2 ஆயிரத்து 184 கோடி செலவில் வழங்கப்பட்டிருக்கிறது.
 இலவச மின்சாரத்திற்கு மட்டும் இதுவரை மொத்தம் ரூ.26 ஆயிரத்து 223 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.
 கூட்டுறவுத்துறை மூலம் ரூ.62 ஆயிரத்து 352 கோடி பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடனாக 81 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

 

The post பயிர்களுக்கு நடுவில் முளைத்த களைச்செடி; விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அதிமுக: பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: