மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விவரக்குறிப்பு தகவல்கள் குழப்பம்: பெற்றோர், மாணவர்கள் குற்றச்சாட்டு

சென்னை: நடப்பாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கான விவரக்குறிப்பில் உள்ள தகவல்கள் குழப்பதை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் 8வது பக்கத்தில் 500 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் 16வது பக்கத்தில் 1,000 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவின்போது, பக்கங்கள் 28 மற்றும் 31ல் சுற்று 2 மற்றும் சுற்று 3ல் புதிதாக பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது என்றும் பக்கம் 43ல் சுற்று 2க்கு முன்பதிவு அனுமதிக்கப்படாது என்று குறிப்பிட்டு 1வது மற்றும் 3வது சுற்றில் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எந்தவொரு சுற்றிலும் மாணவர்கள் ஒதுக்கப்பட்ட பாடத்திட்டத்தை இடைநிறுத்தினால் வைப்புத்தொகை திருப்பி கொடுக்கப்படாது என்று பக்கம் 9ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பக்கம் 50ல் முதல் சுற்றில் மாணவர் வெளியேறினால் இழப்பு ஏதும் இல்லாமல் வைப்புதொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது போல நிறைய முரண்பாடுகள் உள்ளன. இதுகுறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறியதாவது: விண்ணப்ப பதிவுகளில் மாணவர்களுக்கு அதிக நேரம் வழங்குவதற்காக நீட் முடிவுகளுக்கு முன்னதாகவே மருத்துவ மாணவர் சேர்க்கை செயல்முறையை அரசு தொடங்கியுள்ளது. ஆனால் விளக்கக் குறிப்பை மதிப்பாய்வு செய்து திருத்த அவர்களுக்கு ஒரு வருடம் முழுவதும் நேரம் இருந்தது. அப்படி இருந்தும் இவ்வளவு வெளிப்படையாகவே பிழைகள் இருப்பது வருத்தமளிக்கிறது. 24வது பக்கத்தில் கையெழுத்து கோப்பு 4KB முதல் 20KB வரை இருக்க வேண்டும் என்று கூறினாலும், ஆன்லைன் விண்ணப்பத்தில் 10KB முதல் 40KB வரை கோப்பு அளவைக் கேட்கிறது. முழு சேர்க்கை செயல்முறையும் ஆன்லைனில் இருக்கிறது.

நேரடி சேர்க்கை செயல்முறையாக இருந்தால் முறையான ஆலோசனையை பெற்று தெளிவுபடுத்திக்கொள்ளலாம். விண்ணப்பப் பட்டியல் தெளிவாக இல்லாவிட்டால், எப்படி பூர்த்தி செய்வது, 2வது சுற்றில் அபராதம் இல்லாமல் சலுகையை நிராகரிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில பக்கங்கள் 2வது சுற்றில் இருந்து வெளியேறும் மாணவர்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையை இழக்க வேண்டும் என்று கூறினாலும், மற்ற பக்கங்களில் உள்ள வழிமுறைகள் 2வது சுற்றில் அபராதம் இல்லாமல் வெளியேறலாம் என கூறுகின்றன. மேலும் பாதுகாப்பு வைப்புத்தொகை எப்போது திருப்பித் தரப்படும் என்பது குறித்து இரண்டு வெவ்வேறு காலக்கெடுவை அரசு வழங்கியுள்ளது. கவுன்சலிங் முடிந்த இரண்டு மாதங்களுக்குள் பாதுகாப்பு வைப்புத்தொகை திரும்பப் பெறப்படும் என்று 15வது பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தாலும், பக்கங்கள் 7 மற்றும் 47ல் மூன்று மாதங்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விவரக்குறிப்பு தகவல்கள் குழப்பம்: பெற்றோர், மாணவர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: