சேலம், ஜூன் 12: சேலம் மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 11 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் வீடுகளுக்கு சென்று சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்து மாத்திரைகள் வழங்குவதற்காக, கடந்த 2021ம் ஆண்டு மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு தேவையான பிசியோதெரபி (இயன்முறை சிகிச்சை), வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், தொற்றாநோய் பாதிப்புகளுக்கு நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை, களப்பணியாளர்கள் மூலம் அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்படுகிறது. நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான, அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்கி கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தில் 11 லட்சத்து 92 ஆயிரத்து 271 பேர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
The post மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 11 லட்சம் பேர் பயன் appeared first on Dinakaran.