கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை

கடலூர், ஜூன் 12: கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த மூதாட்டியிடம் 2 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (70). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்று காலை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த மர்ம நபர் ஒருவர் தனலட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். அதன் பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து சென்று விட்டார். அவர் சென்ற பின் தனலட்சுமி தான் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பார்த்தபோது அது காணவில்லை. இதனால் அவர் கூச்சலிட்டதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து தனலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் புதுநகர் போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து தனலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். மேலும் அரசு மருத்துவமனையில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தனலட்சுமியிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: