வேலூர், ஜூன் 12: வேலூர் மாவட்டத்தில் உள்ள சர்ஜிக்கல் கடைகளில் அனுமதியின்றி எத்தனால், மெத்தனால் விற்பனை குறித்த திடீர் ஆய்வில் வேலூர் கலால் போலீசார் ஈடுபட்டனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வணிகவரித்துறை உரிமம் பெற்ற 1,500 நிறுவனங்கள் உள்ளன. இதில் வேதிப்பொருட்கள், மருந்து பொருட்கள் விற்கும் கடைகளும் அடக்கம். இந்நிறுவனங்கள் மருந்து என்ற பெயரில் எத்தனால், மெத்தனால், எத்தில் ஆல்கஹால் உட்பட ஆபத்தான திரவ வேதிப்பொருட்களை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளதாக புகார்கள் எழுந்தன.
மேற்கண்ட ஆபத்தான எத்தனால், மெத்தனால் போன்ற பொருட்களை விற்பனை செய்ய தனித்த உரிமம் பெற வேண்டும் என்பது விதி. ஆனால் அவர்கள் ‘டிரேட்’ உரிமம் என்ற வணிக உரிமம் பெற்று இத்தகைய பொருட்களை விற்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து எஸ்பி மதிவாணன் உத்தரவின் பேரில் வேலூர் கலால் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ சிவசந்திரன் மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் ஆகியோர் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மருந்து மற்றும் சர்ஜிக்கல் கடைகளில் மெத்தனால் மற்றும் எத்தனால் அரசு அனுமதியின்றி உரிமம் இல்லாமல் யாரேனும் வைத்திருக்கிறார்களா என்ற அடிப்படையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடைகளின் உரிமையாளர்களுக்கு எத்தனால் மற்றும் மெத்தனால் முறையான அரசு அனுமதியுடன் உரிமம் பெற்று விற்பனை செய்ய அறிவுறுத்தல்களை வழங்கினர். விதிமீறி பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தனிநபர்கள் ஆகியோருக்கு விற்பது தெரியவந்தால் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தனர்.
The post அனுமதியின்றி எத்தனால், மெத்தனால் விற்பனையா? கலால் போலீசார் திடீர் ஆய்வு வேலூர் மாவட்டத்தில் சர்ஜிக்கல் கடைகளில் appeared first on Dinakaran.