வேலூர், ஜூன் 12: இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டலத்தில் வேலூர் உட்பட 4 மாவட்டங்களில் 70 பழமையான கோயில்களில் புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான கோயில்கள், அதன் பழமையை மாற்றாமல் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த நிதியாண்டில் மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் சீரமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, வேலூர் மண்டலத்தில் அடங்கிய வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட 200க்கும் மேற்பட்ட கோயில்களில் முன்னுரிமை அடிப்படையில் 70 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு புனரமைக்கப்படுகின்றன.
இதற்காக அமைக்கப்பட்ட இணை ஆணையர் தலைமையிலான குழுவில் அறநிலையத்துறை பொறியாளர்கள், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், தொல்லியல்துறை வல்லுனர்கள் கொண்ட குழுவின் கூட்டம் கடந்த வாரம் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையர் அனிதா தலைமையில் நடந்தது. இதில் வேலூர் மாவட்டத்தில் வேலப்பாடி தர்மராஜா, திரவுபதியம்மன் கோயில், லத்தேரி திரவுபதியம்மன் கோயில், மீனூர் மலை சீனிவாசபெருமாள் கோயில், குடியாத்தம் காளியம்மன் கோயில், தரணம்பேட்டை ஆஞ்சநேயர் கோயில், மாச்சம்பட்டு வேணுகோபாலசுவாமி கோயில், ராணிப்பேட்டை ரத்தினகிரி பாலமுருகன் கோயில், மேல்புதுப்பாக்கம் கல்யாணவரதராஜ பெருமாள் கோயில், ஆற்காடு பாலாற்றங்கரை கைலாசநாதர் கோயில், சாத்தம்பாக்கம் கோதண்டராமர் கோயில், வாலாஜாபேட்டை செல்லியம்மன் கோயில், திருப்பத்தூர் மாவட்டத்தில் அங்கமுத்துநல்லூர் விநாயகர் கோயில், வெங்கலாபுரம் வெங்கடரமணபெருமாள் கோயில், திருவள்ளூர் மாவட்டம் கிருஷ்ணாகுப்பம் விக்னேஸ்வரர் கோயில், வளக்காணம்பூண்டி தர்மராஜா கோயில், மேலப்பூண்டி வரசித்தி விநாயகர் கோயில் என 70 கோயில்களில் புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு அரசின் ஒப்புதலுடன் கோயில் புனரமைப்புப்பணிகள் தொடங்கும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வேலூர் இணை ஆணையர் மண்டலத்தில் 70 கோயில்கள் புனரமைப்பு அதிகாரிகள் தகவல் இந்து அறநிலையத்துறை appeared first on Dinakaran.