மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: படகுகளை பாதுகாப்பாக நிறுத்திய மீனவர்கள்

மாமல்லபுரம், ஜூன் 12: மாமல்லபுரத்தில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு சென்றனர். மாமல்லபுரத்தில் நேற்று காலை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், பல மீட்டர் தூரம் கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வந்தன. இந்த ராட்சத அலையால் கடல் நீர் முன்னோக்கி வந்து கடற்கரையையொட்டி உள்ள ஓட்டல், ரெஸ்ட்டாரன்ட் மற்றும் ரிசார்ட்டுகள் வரை கடல் நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சி அளித்தது. மாமல்லபுரம் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடல் அலையின் தாக்கத்தை தடுக்கும் வகையில், கடற்கரையொட்டி கற்களை கொட்டி தடுப்புகள் அமைத்துள்ளனர். ஆனால், தடுப்பு கற்களையும் தாண்டி கடல் அலை முன்னோக்கி வந்து தாக்குவதால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், கடற்கரையையொட்டி உள்ள உணவகங்களை கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதிவிட்டு செல்வதால், மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உணவக உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், ராட்சத அலைகள் கடற்கரை கோயிலின் மதில் சுவர் வரை சீறி எழும்பி வந்ததால், அங்குள்ள மணற்பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சியளித்தது. ராட்சத அலையின் தாக்கத்தால் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் அடித்து செல்லாமல் இருக்க கரைப் பகுதியில் மேடான இடத்தில் மீனவர்கள் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். மேலும், நேற்று காலை நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள், கடற்கரைக்கு பொழுதை கழிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ராட்சத அலையை வேடிக்கை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காண முடிந்தது.

The post மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: படகுகளை பாதுகாப்பாக நிறுத்திய மீனவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: