செங்கல்பட்டு, ஜூன் 12: செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் பதிவு செய்யாமல் இயங்கும் குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கு அபராதம் மற்றும் ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்படும் என கலெக்டர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து குழந்தைகள் இல்லங்களும் இளைஞர் நீதி சட்டம் 2015 பிரிவு-41ன் படி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் பதிவு செய்து இயங்க வேண்டும். அவ்வாறு புதியதாக பதிவு செய்ய வேண்டுமென்றால் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் பதிவு செய்யாமல் குழந்தைகள் இல்லங்கள் இயங்கி வருவது அறியப்பட்டால் அக்குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கு இளைஞர் நீதி சட்டம் 2015 பிரிவு-42ன் படி 1 வருட சிறை தண்டனை அல்லது ரூபாய் 1 லட்சத்திற்கு குறையாமல் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பதிவு செய்யாமல் குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருவது அருகில் வசிப்பவர்கள் அல்லது பொதுமக்களால் அறியப்பட்டால் உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் dcpucpt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 63826 12846 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவலினை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தொரிவிக்கப்பட்டுள்ளது.
The post பதிவு செய்யாமல் இயங்கும் குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கு சிறை: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.