சாப்ட்வேர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் எனக்கூறி 10க்கும் மேற்பட்ட புதிய கார்களை அடமானம் வைத்து மோசடி: டிரைவர் கைது 3 கார்கள் பறிமுதல்

பூந்தமல்லி, ஜூன் 12: சாப்ட்வேர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதாகக் கூறி 10க்கும் மேற்பட்ட புதிய கார்களை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட சாப்ட்வேர் நிறுவன டிரைவரை கைது செய்த நசரத்பேட்டை போலீசார் 3 கார்களை பறிமுதல் செய்தனர். பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, மேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (38). இவர்மீது நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், கார் கொடுத்தால் சாப்ட்வேர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அந்த நிறுவனங்களுடன் இணைத்து கார் ஓட்டி மாதம் குறிப்பிட்ட தொகையை தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என பலரும் 10க்கும் மேற்பட்ட புதிய கார்களை வாங்கி ராஜசேகரிடம் கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில் கார் உரிமையாளர்களுக்கு ராஜசேகர் சில மாதங்கள் முறையாக பணம் கொடுத்து வந்துள்ளார். பின்னர் கடந்த சில மாதங்களாக பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். கார் உரிமையாளர்களுக்கு பணமும் கொடுக்காமல், காரையும் திருப்பித் தராமல் அவர் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் இதுகுறித்து கேட்டபோது இவர்களுக்கு சொந்தமான கார்களை அவர் அடமானம் வைத்து மோசடி செய்ததும் தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, கார்களை மீட்டுத்தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜசேகர், சாப்ட்வேர் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்தபோது நண்பர்களிடம் கார்களை வாங்கி கொடுக்குமாறு கூறியதன் பேரில் 10க்கும் மேற்பட்ட கார்களை வாங்கி கொடுத்துள்ளனர். அதில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து கார்களை அடமானம் வைத்து சரி கட்டியதும், தொடர்ந்து கார்களை அடமானம் வைத்து மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ராஜசேகரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3 கார்களை பறிமுதல் செய்துள்ளனர். மீதமுள்ள கார்களை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post சாப்ட்வேர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் எனக்கூறி 10க்கும் மேற்பட்ட புதிய கார்களை அடமானம் வைத்து மோசடி: டிரைவர் கைது 3 கார்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: