திருவள்ளூர், ஜூன் 12: திருவள்ளூர் மாவட்டத்தில் 1,014 சுய உதவிக் குழுக்கள் கொண்ட 2,028 பயனாளிகளுக்கு ரூ.131.80 கோடி வங்கிக் கடன் உதவியை கலெக்டர் பிரதாப் வழங்கினார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனை தொடர்ந்து, திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்பூதூர், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் கலெக்டர் மு.பிரதாப் மகளிர் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு 1,014 மகளிர் சுய உதவிக் குழுக்கள் கொண்ட 2,028 பயனாளிகளுக்கு ரூ.131.80 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவியை நேற்று வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், சுய உதவிக்குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலைவாய்ப்பு, சமூக மேம்பாடு பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகிய 3 முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 19,439 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இதில் மொத்தம் 2,52,707 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 14,272 குழுக்களும், இதில் 1,85,536 உறுப்பினர்களும் உள்ளனர். நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் 5,167 குழுக்களும், இதில் 67,171 உறுப்பினர்களும் உள்ளனர். 2025 – 2026ம் ஆண்டில் சுய உதவிக் குழுக் கடனாக இதுவரை ரூ.247.87 கோடி சாதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் 1,014 சுய உதவிக் குழுக்கள் கொண்ட 2,028 பயனாளிகளுக்கு ரூ.131.80 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை மூலதனமாக கொண்டு பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைந்து பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்து நிற்க வேண்டும் என்றார். இதில் மாவட்ட திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செல்வராணி, அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி, உதவி திட்ட அலுவலர்கள் அமல்ராஜ், சரவணன் சீனிவாசன், பெரியநாயகம், கார்த்திகேயன், சந்திரசேகர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post 1,014 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 2,028 பயனாளிகளுக்கு ரூ.131.80 கோடி வங்கிக்கடன்: மாவட்டத்தில் இதுவரை ரூ.247.87 கோடி வழங்கி சாதனை appeared first on Dinakaran.