தாம்பரம், ஜூன் 12: தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் நேற்று நேரில் பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் சானடோரியம் பகுதியில் ரூ.43.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டிடத்திற்கான கட்டுமானப் பணி, 52வது வார்டு, கன்னடபாளயம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானம் மற்றும் புனரமைப்பு பணி, கன்னடபாளயம் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, 55வது வார்டு, பாலாஜி நகர் பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் 290 மீட்டர் நீளத்திற்கு புதிதாக மேற்கொள்ளப்பட்டும் தார்சாலை பணி, 55வது வார்டு, மேற்கு தாம்பரம், பாப்பன் கால்வாயில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியை பார்வையிட்டார்.
பின்னர் 56வது வார்டு, காந்தி தெரு பகுதியில் ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் 320 மீட்டர் நீளத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையை ஆய்வு செய்து தரம் பரிசோதனை செய்தார். மேலும் பெருங்களத்தூர், மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகள் மற்றும் பள்ளியின் புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாகக் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் மண்டலக்குழு தலைவர் டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, பெரியநாயகம், உதவி பொறியாளர், இளநிலைப் பொறியாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post தாம்பரம் 4வது மண்டலத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.