திருவொற்றியூர், ஜூன் 12: மணலி புதுநகரில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மணலி மண்டலம், 15வது வார்டு மணலி புதுநகரில் மாவட்ட கிளை நூலகம் உள்ளது. இங்கு டிஎன்பிசி, ஐஏஎஸ், நீட், சட்டம் மற்றும் அனைத்து கல்லூரி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான 30460 புத்தகங்கள் உள்ளன. நூலகத்தை 3432 உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வாசகர்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலகம் போதிய அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதால் இதனை விரிவுபடுத்த வேண்டும், என்று வார்டு கவுன்சிலர் நந்தினி சண்முகம், மண்டல குழு கூட்டத்தில் தலைவர் ஏ.வி.ஆறுமுகம் முன்னிலையில் கோரிக்கை வைத்து இதற்கான தீர்மானமும் கொண்டு வந்தார்.
இதையடுத்து ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான திட்ட வரைவுகளுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பணிகள் துவக்கப்பட்டன. பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், உதவி ஆணையர்(பொறுப்பு) தேவேந்திரன், கவுன்சிலர்கள் நந்தினி சண்முகம், ராஜேந்திரன், காசிநாதன் ஆகியோர் புதிய நூலகத்தில் குத்து விளக்கு ஏற்றி வாசகர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பின்னர் புதிதாக வழங்கப்பட்ட புத்தகங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தனர். இந்நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர் தென்னவன், உதவி பொறியாளர் சோம சுந்தர்ராஜ், நூலகர் முருகன் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண்டனர்.
The post மணலி புதுநகரில் ரூ.22 லட்சத்தில் புதிய நூலகம்: முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.