ஆபரேஷன் கருப்பு காடு… சுருங்கும் சிவப்பு தாழ்வாரம்… இன்னும் 10 மாதத்தில் ஆட்டம் முடியுமா? முடிவின் விளிம்பில் நக்சல்கள்: இறுதி அத்தியாயத்தை எழுதும் பாதுகாப்பு படையினர்

2026 மார்ச்சுக்குள் அதாவது இன்னும் 10 மாத்துக்குள் இந்தியாவில் இருந்து நக்சலைட்டுகள் துடைத்தெறியப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு சூளுரைத்துள்ளது. நக்சலைட் இயக்கங்களின் கடைசி அத்தியாயத்தை பாதுகாப்பு படையினர் எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதன் ஒரு கட்டமாக நக்சல்களுக்கு எதிரான ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் (கருப்பு காடு)’ என்ற மிகப்பெரிய வேட்டையை, பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றனர். அண்மை காலங்களில், நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாதுகாப்பு படையினரின் என்கவுன்டரில் அடுத்தடுத்து நக்சலைட்டுகள் கொத்து கொத்தாக மடிந்து போகிறார்கள். இது இந்தியாவில் நக்சல் இயக்கத்தின் இறுதி அத்தியாயம் என்று வர்ணிக்கப்படுகிறது.

1947 ஆகஸ்ட் 15 ம் தேதி 190 ஆண்டு கால ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலைபெற்ற நாள். சுதந்திரம் பெற்றதும் அடிமைத்தளை உடைந்து, நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்ற மகிழ்ச்சியில் இருந்தனர் மக்கள். ஆனால், அது அவ்வளவு எளிதாக நடந்துவிடக் கூடியது அல்ல என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை. ஆங்கிலேயர் வெளியேறினாலும், ஆட்சி, அதிகாரம், நிர்வாகத்தில் அவர்கள் விட்டுச் சென்றிருந்த எச்சங்களை அகற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. அன்றைய இந்தியாவில் விவசாயம் ஒன்றே பெருவாரியான மக்களின் வாழ்வாதாரம்.

அந்த தொழிலுக்கு மூலதனமே நிலம்தான். ஆனால், அந்த நிலம் யாருக்கு சொந்தம்? என்ற விவகாரம் நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருந்தது. ஆங்கிலேயர் காலத்தில், அவர்களது ஒரே குறி வரி வருமானம்தான். தங்கள் வரி வருவாயை பெருக்க பெரிய பெரிய நிலச்சுவான்தார்களுக்கு நிலங்களை வாரி வழங்கியது ஆங்கிலேய அரசு. வரிமட்டும் ஒழுங்காக கட்டிடனும் என்பதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஒரே நிபந்தனை. இப்படிதான் ஒரு சிலரிடம் மட்டும் பல நூறு ஏக்கர் நிலங்கள் குவிந்தன. இவ்வளவு நிலத்தை வைத்துக்கொண்டு அவர்கள் என்னதான் செய்வார்கள்.

பயிர் விளைவிக்க வேண்டும் என்றால் பணம் நிறைய செலவாகுமே. அப்போதுதான் சும்மா இருந்தே சம்பாதிக்கும் குத்தகை திட்டம் வந்தது. ஆங்கிலேயர் தந்த நிலங்களை பலருக்கு குத்தகைக்கு விட்டு வந்தனர் நிலச்சுவான்தார்கள். இதில் என்ன லாபம் கிடைக்கப் போகிறது என்றுதானே நினைப்பீர்கள். விளைச்சலில் பாதி அதாவது 100 மூட்டை நெல்லோ கோதுமையோ விளைந்தால் அதில் 50 மூட்டைகளை நிலச்சுவான்தார்களுக்கு குத்தகைதாரர் தர வேண்டும். நிலத்தை பண்படுத்தி, உழுது, நீர் பாய்ச்சி, உரம்போட்டு, களை பறித்து, பாதுகாத்து அறுவடை செய்யும் விவசாயிக்கு மீதமுள்ள 50 மூட்டைதான் கிடைக்கும். இதில் விளைச்சல் குறைந்தால் டார்ச்சர் வேறு.

அந்த கால கட்டத்தில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தின்படி நாட்டு மக்களில் 60 சதவீதம் பேர் நிலமற்றவர்கள். மக்கள் தொகையில் 4 சதவீதம் பேர் கையில்தான் பெரும்பாலான நிலம் சிக்கியிருந்தது.
தேச உருவாக்கத்தில் இணைந்து நின்ற ஒரு தலைமுறை, சுதந்திரத்துக்கு பிறகு நடக்கும் எனறு தாங்கள் நம்பிய எதுவுமே நடக்காமல் போனதால் பொறுமை இழந்தனர். அவர்களில் சிலரது கவனத்தை சீன கம்யூனிச தலைவர் மா சே துங்கின் கொள்கைகள் ஈர்த்தன. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கோஷம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழ துவங்கியது.

இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி பகுதி மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்துக்குள் வந்தது. அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்ற சிந்தாந்தத்தை பரப்பி வந்தனர். இதற்காக நக்சல்பாரி பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டன. 1967 மே 4ம் தேதி வில்,அம்பு, ஈட்டியுடன் திரண்ட விவசாயிகள் 150 பேர் நிலச்சுவான்தார்களின் தானிய கிடங்குகளை தாக்கி 11 ஆயிரம் கிலோ நெல் மூட்டைகளை எடுத்துச் சென்றனர். நிலங்களையும் தங்கள் வசப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினர். ஆனால், பெரும் நிலச்சுவான்தார்கள் எதிர்ப்பை முளையிலேயே கிள்ளி எறிய முயன்றனர்.

நீரு பூத்த நெருப்பாக இருந்த இந்த மோதல், பிகுல் கிசான் என்ற விவசாயி நிலச்சுவான்தார்களின் அடியாட்களால் தாக்கப்பட்டதால் பூதாகரமாக வெடித்தது. பதிலுக்கு விவசாயிகள் தாக்க, கலவரத்தை ஒடுக்க போலீஸ் படையை திரட்ட துவங்கியது அரசு. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை அம்பு எய்து விவசாயிகள் கொலை செய்ய, 1967 மே 25ம் தேதி விவசாயிகள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், 9 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பலியாக விவசாயிகளின் இந்த கிளர்ச்சி அகில இந்திய அளவில் பரவியது. இதுதான் நக்சல்பாரி இயக்கத்தின் துவக்கம். போலீஸ் கெடுபிடியால் நக்சலைட் மூத்த தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். இயக்கத்தை வழிநடத்திய சாரு மஜூம்தார் தலைமறைவானார்.

இந்த இயக்கம் மேற்கு வங்கத்தில் இருந்து படிப்படியாக கேரளா, ஆந்திரா, ஒடிசா, மபி, மகாராஷ்டிரா, தமிழகத்திலும் பரவியது குறிப்பிடத்தக்கது. நக்சல் எழுச்சியை வெறும் விவசாயிகளின் போராட்டமாக பார்க்க முடியாது. ஏனென்றால், இந்த எழுச்சியால் பெரிய அளவில் ஈர்க்கப்பட்டது இளைஞர்கள்தான். அதுவும் இன்ஜினியரிங், சட்டம் படித்தவர்கள் அதிகம் இயக்கத்தில் இணைந்தனர். ஒரு பக்கம் இயக்கம் வளர்ந்தபோதும் முக்கிய தலைவர்கள் போலீசிடம் சிக்கினர். சாரு மஜும்தார் கொல்கத்தா சிறையில் காவலர்களின் சித்ரவதையால் 1972ல் உயிரிழந்தார்.

1973ல் நாடெங்கிலும் 32,000 நக்சல் தோழர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். 1978 தொடங்கி இயக்கம் பல பிளவுகளைச் சந்தித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதுப்புது நக்சல் இயக்கங்கள் உருவாகின. அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், சுரங்க சுரண்டல் பேர்வழிகளிடம் இருந்து பழங்குடியினர் நலன் பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகள் வில், அம்பு, ஈட்டிக்கு பதில் துப்பாக்கி ஏந்தின. குண்டுகள் தயாரித்தன. ஒரு கட்டத்தில் 11 மாநிலங்களில் நக்சலைட் ஆதிக்கம் இருந்தது. அந்த பகுதிகளுக்கு சிவப்பு தாழ்வாரம் என்று பெயர்.

ஆனால், அதே நேரத்தில், நக்சல் இயக்கங்களுக்கு மக்களிடையே இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கியது. வலுவாக உள்ள பகுதிகளில் அவர்கள் மீட்ட நிலங்களை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தபோதும் அதைப் பாதுகாக்க இயலவில்லை. ஒன்றிய, மாநில அரசுகள் தமது மிகக் கடுமையான அடக்குமுறைகள் மூலமும், நக்சல் பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி அப்பகுதி மக்களை தங்கள் வசப்படுத்தின. ஆயுதப் போராட்டங்கள் மட்டுமே தங்கள் இலக்கை அடைய ஒரே வழி என்ற பிடிவாதமான கொள்கையும் அவர்களது செல்வாக்கு சரிய காரணமாக அமைந்தன.

தேர்தல் ஜனநாயகத்தை புறக்கணித்தது மக்களிடம் இருந்து நக்சலைட்டுகளை அந்நியப்படுத்தியது. இதற்கிடையே ஒவ்வொரு மாநில அரசும் ஒன்றிய அரசின் உதவியோடு நக்சலைட்டுகளை அடியோடு ஒழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட துவங்கின. விளைவு. ஒன்றிய அரசின் படைகளோடு, ஒவ்வொரு மாநில அரசும் சிறப்பு படைகளை உருவாக்கியது. ‘சல்வா ஜூடும்’, சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில் பழங்குடியினரில் சிலரை தேர்ந்தெடுத்து ஆயுதமும் கொடுத்து, சம்பளத்தையும் வழங்கி நக்சல்களை மாநிலங்கள் ஒழித்து வருகிறார்கள்.

2010 வாக்கில் நாடு முழுவதும் 180 மாவட்டங்கள் நக்சல் வன்முறையால் பாதித்த மாவட்டங்களாக ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒன்றிய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகளால் இன்றைக்கு 7 மாநிலங்களில் 18 மாவட்டங்களில் மட்டுமே நக்சல் நடமாட்டம் உள்ளது. அந்த அளவுக்கு சிவப்பு தாழ்வாரம் சுருங்கி போய்விட்டது. இதில் 7 மாவட்டங்கள் சட்டீஸ்கரில் உள்ளது. இதனால், நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் சட்டீஸ்கரில் தீவிரமாக நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான நக்சல்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 8 ஆயிரம் நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர்.

தொடர் நடவடிக்கைகளால் நக்சல் வன்முறை குறைந்து விட்டது. கடந்த மே மாதம் 21ம் தேதி சட்டீஸ்கரின் அபுஜ்மத் வனப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 27 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதில் முக்கியமானவர் நக்சல் அமைப்பின் பொதுச் செயலாளரான நம்பல கேசவ் ராவ் என்கிற பசவராஜு. இவரது மரணம் நக்சல் இயக்கத்துக்கு விழுந்த பேரிடியாக கருதப்படுகிறது. இந்த நிலையில், நக்சல் இயக்கத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களான சுதாகர், பாஸ்கர் ஆகியோர் அடுத்தடுத்து போலீசால் கொல்லப்பட அந்த இயக்கமே ஆடிப்போய் உள்ளது. இதனால் நக்சலைட்டுகள் பலர் சரணடைய துவங்கிவிட்டனர்.

2026 மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் இருந்து நக்சல் இயக்கம் அடியோடு ஒழிக்கப்படும் என்று ஒன்றிய அரசு சூளுரைத்துள்ள நிலையில், அடுத்தடுத்து தலைவர்கள் போலீஸ் என்கவுன்டரில் பலியாகி வருவது நக்சல் இயக்கத்தின் முடிவு காலம் நெருங்கி விட்டதை காட்டுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகத்தில் ஆயுதமேந்திய போராட்டத்துக்கு இடமில்லை. ஆங்கிலேயருக்கு எதிராக கத்தியின்றி ரத்தமின்றி சத்தியாகிரக போராட்டத்தின் மூலம் விடுதலை பெற்ற நாட்டில் ஆயுதப் போராட்டத்துக்கு மக்களிடமும் ஆதரவு கிடைக்காது. ஒவ்வொரு குடிமகன் கையிலும் உள்ள ஓட்டு, ஜனநாயகம் வழங்கி உள்ள மாபெரும் ஆயுதம். அந்த ஆயுதத்தை மக்கள் தெளிவாக பயன்படுத்தினாலே நாட்டை சீர்படுத்திவிடலாம். ஆயுதங்களுக்கு எந்த வேலையும் இருக்காது. இதை உணராததாலேயே நக்சல் இயக்கம் இன்று தனது கடைசி கட்டத்தில் இருக்கிறது.

நக்சல் வன்முறையால் ஏற்பட்ட உயிர் பலி
மாநிலம் 2022 2023 2024
ஆந்திரா 3 3 31
பீகார் 11 4 2
சட்டீஸ்கர் 246 305 267
ஜார்க்கண்ட் 96 129 69
கேரளா 0 4 0
மபி 6 7 11
மகாராஷ்டிரா 16 19 10
ஒடிசா 16 12 6
தெலங்கானா 9 3 8

நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள்
மாநிலம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்
சட்டீஸ்கர் 7 (பிஜாப்பூர் , தண்டேவாடா , கரியாபண்ட், கன்கேர் , மோஹ்லா-மன்பூர்-அம்பாகர் சௌகி , நாராயண்பூர், சுக்மா)
ஒடிசா 4 (கலஹண்டி , கந்தமால் , மல்கங்கிரி, நுவாபாடா)
மத்தியப் பிரதேசம் 2 (பாலகாட் , மண்டலா)
தெலங்கானா 2 (பத்ராத்ரி கோத்தகுடம் , முலுகு)
ஆந்திரப் பிரதேசம் 1 (அல்லூரி சீதாராம ராஜு)
ஜார்கண்ட் 1(மேற்கு சிங்பும்)
மகாராஷ்டிரா 1 (கட்சிரோலி)
மொத்தம் 18

நக்சல்களால் கொல்லப்பட்ட அப்பாவிகள்
2014 222
2024 121

கடந்த 3 ஆண்டில் பலியானவர்கள்
2022 413
2023 485
2024 374

தொழில் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்
2014 100
2024 25

* நக்சல் வன்முறையால் பாதித்த மாநிலங்கள் 7
* மாவட்டங்கள் 18

* தமிழ்நாட்டில் நக்சலைட்டுகள்
அப்பு என்கிற அற்புதசாமி. கோவையை சேர்ந்தவர். 1967ல் நக்சல்பாரி இயக்கம் தோற்றுவிக்கப்பட்டபோது சாரு மஜும்தாருடன் இருந்தவர். அந்த இயக்கத்தின் மையக் குழுவுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யபபட்டவர். பின்னர், நக்சலைட் அமைப்பின் தமிழ்நாடு மாநில செயலாளராக தேர்வானார். 1969ல் தருமபுரி வனப்பகுதியில் அவர் கொல்லப்பட்டார். தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட் இயக்கத்தை முன்னின்று வழிநடத்திய இருதலைவர்களில் இன்னொருவர் பாலன். 1980களின் முற்பகுதியில், தமிழ்நாட்டில் ஏராளமான பிரிவினைவாதக் குழுக்கள் தோன்றின.

அந்த நேரத்தில், தமிழ்நாடு விடுதலைப்படை துவக்கத்துக்கு வித்திட்டவர் முன்னாள் பள்ளி ஆசிரியரும், நக்சலைட் தலைவருமான புலவர் கலியபெருமாள். பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவரான தமிழரசன் தலைமை தாங்கினார். 1985 மற்றும் 1987 க்கு இடையில், இந்த அமைப்புசிறிய குண்டுவெடிப்புகள் மற்றும் கொலைகளில் ஈடுபட்டன, நிதி திரட்டுவதற்காக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைக் கொள்ளையடிக்கத் தொடங்கியது. செப்டம்பர் 1, 1987 அன்று, பொன்பரப்பியில் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றபோது தமிழரசன் மற்றும் நான்கு பேர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

தமிழரசனின் மரணத்திற்குப் பிறகு, லெனின் என்கிற தெய்வசிகாமணிதலைமையை ஏற்றுக்கொண்டார். மார்ச் 29, 1994 அன்று, தெற்கு ஆற்காடு மாவட்டத்தில் உள்ள முத்தாண்டிகுப்பத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மீது குண்டுவீச முயன்ற லெனின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். லெனினின் மரணத்திற்குப் பிறகு கூவாகம் ராமசாமி அதன் தலைவராகவும், இளவரசன் அதன் செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதன் பிறகு அந்த இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக போலீசாரால் ஒடுக்கப்பட்டது. ஆதரவாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்தடுத்து என்கவுன்டரில் பலியான நக்சல் தலைவர்கள்
* மே 21, 2025
சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் நம்பல கேசவ் ராவ் என்கிற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சட்டீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களுக்கு இடையேயான அபுஜ்மத் வனப்பகுதியில்சுட்டுக் கொல்லப்பட்டனர். பி.டெக் படித்த இன்ஜினியரான பசவராஜு பல ஆண்டுகளாக மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்தவர். பல முறை போலீஸ், அரசியல்வாதிகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு காரணமானவர். இவரது தலைக்கு என்.ஐ.ஏ, சி.பி.ஐ மற்றும் பல்வேறு மாநில அரசுகள் அறிவித்த மொத்த பரிசுத்தொகை ஒன்றரை கோடி ரூபாயையும் தாண்டிய நிிலையில் அவர் கொல்லப்பட்டார்.
* ஜூன் 6, 2025
சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டம் இந்திராவதி தேசிய பூங்காவில் நடந்த என்கவுன்டரில் நக்சல் தலைவர் பாஸ்கர் கொல்லப்பட்டார். தெலங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரின் தலைக்கு மொத்தம் 45 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
* ஜூன் 5, 2025
சட்டீஸ்கரின் பிஜப்பூர் வனப்பகுதியில் நக்சல் இயக்கத்தின் மூத்த தலைவர் நரசிம்மா சாலா ராம் (எ) சுதாகர் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

The post ஆபரேஷன் கருப்பு காடு… சுருங்கும் சிவப்பு தாழ்வாரம்… இன்னும் 10 மாதத்தில் ஆட்டம் முடியுமா? முடிவின் விளிம்பில் நக்சல்கள்: இறுதி அத்தியாயத்தை எழுதும் பாதுகாப்பு படையினர் appeared first on Dinakaran.

Related Stories: