அன்புமணி ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்; பொதுக்குழுவை கூட்ட தயாராகும் ராமதாஸ்: விரக்தியில் பாமக தொண்டர்கள்

திண்டிவனம்: பாமகவை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அன்புமணியின் ஆதரவாளர்களை கூண்டோடு நீக்கி வரும் ராமதாஸ் விரைவில் பொதுக்குழுவை கூட்டி கட்சியில் தன் செல்வாக்கை நிரூபிக்க தயாராகி வருகிறார். தந்தை, மகன் உச்சகட்ட மோதலால் பாமக தொண்டர்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையிலான கூட்டணி புகைச்சல், மாநில இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தன் நியமிக்கப்பட்ட நாளில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு மேடையிலே பூதாகரமாக வெடித்தது. சீனியர் தலைவர்கள் சமரசம் மேற்கொண்டும் தந்தை, மகன் மோதல் முடிவுக்கு வராததால் நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியடைந்தனர். இதனிடையே கடந்த 5ம்தேதி அன்புமணி தைலாபுரத்துக்கு வந்தும் ராமதாஸ் இறங்கி வராததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அன்புமணி, இறுகிய முகத்துடன் தோட்டத்தை விட்டு வெளியேறிய நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் ராமதாசை சந்தித்து 3 மணி நேரம் மரியாதை நிமித்தமாக பேசினர்.

இதனிடையே ராமதாஸ் கடந்த 7ம்தேதி திடீரென சென்னை புறப்பட்டு சென்றார். அங்கு ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகின. மேலும் கட்சியிலும், கூட்டணி விவகாரத்திலும் ராமதாஸ் சில முக்கிய முடிவுகளை எடுத்து விட்டதாகவும் கூறப்பட்டன. இதையடுத்து சென்னையில் இருந்து கடந்த 9ம் தேதி தைலாபுரம் திரும்பினார் ராமதாஸ். இந்நிலையில் நேற்று கட்சி முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு அன்புமணி ஆதரவாளர்களை அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி திருவள்ளூர், கடலூர், மத்திய சென்னை (மேற்கு), கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார். நேற்று மட்டும் 13 மாவட்ட செயலாளர்கள், 11 மாவட்ட தலைவர்களை நியமித்திருந்தார். இதுவரை 49 மாவட்ட செயலாளர்கள், 27 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் புதிதாக நியமித்துள்ளார்.

சென்னையில் அன்புமணி நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற சமூக நீதி பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவரான பாலுவை நீக்கிவிட்டு கோபி என்பவரை நியமித்தார். தைலாபுரத்தில் ராமதாஸ் அதிரடிகளை நிகழ்த்தி கொண்டிருந்த அதே சமயத்தில் சென்னையில் அன்புமணி பொதுக்குழு கூட்ட அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். 10 வருவாய் மாவட்டங்களில் வரும் 15ம் தேதி முதல் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். இதில் அனைத்து அமைப்பின் நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ராமதாசும் பொதுக்குழுவை கூட்டும் நோக்கத்தோடுதான் அன்புமணி ஆதரவாளர்களை அதிரடியாக நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு அன்புமணி தலைமையில் அவரது ஏற்பாட்டின்படி நடந்தது.

இதன் மூலம் கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை அவர் நிரூபித்தார். தற்போது தந்தை- மகன் மோதல் உச்சகட்ட நிலையை எட்டி உள்ள நிலையில் பூம்புகாரில் நடக்க உள்ள மகளிர் மாநாட்டை அன்புமணி துணை இல்லாமல் தன் தலைமையில நடத்தி காட்டி கட்சி தன் பக்கம் தான் என நிரூபிக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளார். இதனால் தான் அவர் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழியை மாநாட்டு தலைவராக அறிவித்தார். மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தி காட்டிவிட்டு பின்னர் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தன் பலத்தை நிரூபிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தைலாபுரத்துக்கு திருவாரூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் இன்று வந்துள்ளனர். அவர்களிடம் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளராக வேணு பாஸ்கரனையும், தலைவராக பழனியையும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். தந்தை, மகன் இருவருமே கட்சியை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற முடிவோடு போட்டி போட்டு செயல்படுத்திவரும் இந்த அதிரடி நடவடிக்கையால் பாமக தொண்டர்கள் திண்டாட்டத்தில் உள்ளனர்.

 

The post அன்புமணி ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்; பொதுக்குழுவை கூட்ட தயாராகும் ராமதாஸ்: விரக்தியில் பாமக தொண்டர்கள் appeared first on Dinakaran.

Related Stories: