நீங்கள் நீக்கும் முன் நானே விலகுகிறேன்; பசுமை தாயகம் இயக்க மாநில நிர்வாகி விலகல்: ராமதாசுக்கு பரபரப்பு கடிதம்

சேலம்: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரின் மகனான பாமக தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் தனித்தனியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அன்புமணியின் ஆதரவாளர்களை பொறுப்புகளில் இருந்து ராமதாஸ் நீக்கி வருகிறார். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த பசுமை தாயகத்தின் மாநில இணைச் செயலாளர் சத்ரியசேகர் அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்களது செயல்களால் பல லட்சக்கணக்கானோர் உங்கள் மனதில் இருந்து விலகிய நிலையில் நீங்கள் நீக்கும் முன்பாக, நானாக உங்களிடம் இருந்து விலகி கொள்கிறேன். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு இருந்தோம்.

அதே நம்பிக்கையோடு மாமல்லபுரத்தில் நடைபெற்ற இளைஞர் பெருவிழா மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு வெற்றி பெறச் செய்தோம். அதற்கு பிறகு ஏதேனும் நல்லது நடக்கும் என எண்ணியிருந்தோம். ஆனால் சட்டரீதியாக நீங்கள் சொன்ன அனைத்து பணிகளையும் சிறப்புடன் செய்து முடித்த, வழக்கறிஞர் பாலுவை கட்சிப்பொறுப்பில் இருந்து விடுவித்து அறிக்கை வெளியிட்ட பின்பு, கடந்த காலங்களை போல, இந்த முறை கடந்து போக முடியலை. எதிர்கால கட்சியின் வளர்ச்சி பணிகளை கருத்தில் கொண்டு, மேலும் 10.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கனவுகளை நனவாக்கிட அன்புமணிக்கு துணையாக இருப்பேன்.

அன்புமணி தலைமையில் எதிர்காலத்தில் ஆளும் அதிகாரத்திற்கு பாமகவை கொண்டு செல்வோம். பெற்ற மகனுக்கு, ஒரே ஒரு செல்ல மகனுக்கு, மிகவும் திறமையான அன்புமணிக்கே இந்த நிலை என்றால் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம். வக்கீல் பாலு உள்ளிட்ட இந்த இயக்கத்தை வலுவாக்கிட உழைத்த எத்தனையோ மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நீக்கம் என்று சொல்லும்போது நாங்கள் எல்லாம் எம்மாத்திரம். கடந்த சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களோடு பயணம் செய்த அந்த நினைவுகளோடு, கனத்த இதயத்தோடு, மீதி நாள் இருக்கும் அந்த காலத்தையும் கடந்து செல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post நீங்கள் நீக்கும் முன் நானே விலகுகிறேன்; பசுமை தாயகம் இயக்க மாநில நிர்வாகி விலகல்: ராமதாசுக்கு பரபரப்பு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: