தேமுதிக தனித்து போட்டியா?:காலம்தான் பதில் சொல்லும்.. 2024ல் மாநிலங்களவை சீட் தருவதாக எழுதிக்கொடுத்தவர் எடப்பாடி: பிரேமலதா பேட்டி!!

சென்னை: தேமுதிக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்கு பின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

தனித்து போட்டியா? : காலமே தீர்மானிக்கும்: பிரேமலதா
தேமுதிக தனித்து போட்டியிடுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். தனித்து போட்டியிட தேமுதிகவுக்கு பயம் இல்லை. அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்பதை இப்போது கூறமுடியாது. 6 மாதங்கள் கட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளோம். கூட்டணி குறித்து முடிவு செய்ய கால அவகாசம் தேவை என அவர் தெரிவித்தார்.

2024ல் மாநிலங்களவை சீட் – எழுதிக்கொடுத்தவர் எடப்பாடி: பிரேமலதா
2024ல் மாநிலங்களவை சீட் தருவதாக எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தவர் எடப்பாடி. மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதி தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் உள்ளோம். எழுத்துப்பூர்வமாக உறுதி தரவில்லை என்று எடப்பாடி கூறியது தேமுதிகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026ல் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தரப்படும் என்று அதிமுகதான் கூறியுள்ளது என பிரேமலதா கூறினார்.

விஜய் எங்கள் வீட்டு பையன்: பிரேமலதா
விஜய் எங்கள் வீட்டு பையன். தவெகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா என்பதை விஜயிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.

செல்வப்பெருந்தகைக்கு பிரேமலதா நன்றி
இந்தியா கூட்டணியில் இணைய செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்ததற்கு பிரேமலதா நன்றி தெரிவித்தார். தலைமை பொறுப்பில் இருக்கும் முதல்வர்தான் கருத்தை சொல்ல வேண்டும் என அவர் கூறினார்.

The post தேமுதிக தனித்து போட்டியா?:காலம்தான் பதில் சொல்லும்.. 2024ல் மாநிலங்களவை சீட் தருவதாக எழுதிக்கொடுத்தவர் எடப்பாடி: பிரேமலதா பேட்டி!! appeared first on Dinakaran.

Related Stories: