நீலகிரியில் ஆறு வட்டங்களில் முதல் நாள் ஜமாபந்தியில் 817 மனுக்கள் பெறப்பட்டன

ஊட்டி, ஜூன் 11: நீலகிரி மாவட்டத்தில் முதல் நாள் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஆறு வட்டங்களில் மொத்தம் 817 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஊட்டி, கூடலூர், குன்னூர், குந்தா, கோத்தகிரி மற்றும் பந்தலூர் ஆகிய ஆறு வட்டங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. முதல் நாள் (நேற்று முன்தினம்) குன்னூரில் நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், பல்வேறு அரசின் நல திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அதேபோல், ஊட்டி வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் நடந்தது.
கோத்தகிரி வட்டத்தில் குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஜமாபந்தி நடந்தது.

குந்தா வட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் தலைமையிலும், கூடலூர் வட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ராதாகிருஷ்ணன் தலைமையிலும், பந்தலூர் வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமையிலும், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த ஜமாபந்தியில் கலந்து கொண்டு பொதுமக்கள் குடியிருப்பு, சாலை வசதி, குடிநீர் வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி மனுக்களை அளித்தனர். இதில் ஊட்டி வட்டத்தில் மட்டும் 286 மனுக்கள் பெறப்பட்டன. குந்தாவில் 97 மனுக்களும், குன்னூரில் 159 மனுக்களும், கோத்தகிரியில் 56 மனுக்களும், கூடலூரில் 148 மனுக்களும் மற்றும் பந்தலூரில் 71 மனுக்களும் என மொத்தம் 817 மனுக்கள் பெறப்பட்டன.

The post நீலகிரியில் ஆறு வட்டங்களில் முதல் நாள் ஜமாபந்தியில் 817 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Related Stories: