வாடிப்பட்டி: வைகாசி பௌர்ணமியையொட்டி தேனூர் வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அமைந்துள்ளது தேனூர் கிராமம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கள்ளழகர் இங்குள்ள வைகையாற்றில் இறங்கினார் என்பது வரலாறு. இந்த நிகழ்வு மதுரைக்கு மாற்றப்பட்டு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேனூரின் வரலாற்று பெருமையை நினைவு கூறும் வகையில் கடந்த 17 ஆண்டுகளாக ஆண்டுதோறும் வைகாசி பௌர்ணமி தினத்தன்று இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு தேனூர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதன்படி, இன்று இவ்விழா அதிவிமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி தேனூர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து வைகை ஆற்றில் இறங்கினார். பின்பு ஆற்றில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
The post வைகாசி பௌர்ணமியையொட்டி தேனூர் வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் appeared first on Dinakaran.