திருச்செங்கோடு, ஜூன் 10: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா 14 நாட்கள் கோலாகலமாக நடக்கும். 9ம் நாள் நிகழ்வாக திருக்கல்யாண உற்சவம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் பரிவாரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக, கைலாசநாதர் ஆலயம் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டு வேலவர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன், துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து மற்றும் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாண உற்சவத்தின் முடிவில், பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு, லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விநாயகர், செங்கோட்டுவேலவர் தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், இரவு ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது.
The post வைகாசி விசாகத் திருவிழாவில் இன்று வடம் பிடிக்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.