90 அடி கிணற்றில் டிராக்டருடன் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம், மதுரா சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கேல் (55). இவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மின்மோட்டார் பழுதடைந்து இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் 2.30 மணி அளவில் டிராக்டர் மூலம் கயிறு கட்டி மின்மோட்டாரை வெளியே எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது டிராக்டர் ஆப் செய்யப்படாமல் இயக்கத்திலேயே இருந்தது. பாஸ்கேலின் தம்பி மகன் ஜோன் இன்பராஜ்(28) மற்றும் ஜெரீஸ்(14), டேனிஷ்(7) ஆகிய 3 பேர் டிராக்டரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.

திடீரென பின்னோக்கி வந்த டிராக்டர் கிணற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது. இதில் ஜோன் இன்பராஜ் மற்றும் ஜெரீஸ் நீச்சலடித்து தப்பினர். சிறுவன் டேனிஷ் டிராக்டருக்கு அடியில் சிக்கினான். 90 அடி கிணற்றில் 60 அடிக்கு தண்ணீர் இருந்த நிலையில் தீயணைப்பு துறை வீரர்கள் வந்து தண்ணீரை வெளியேற்றினர். மழை பெய்ததால் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் சிறுவன் டேனிஷ் சடலமாக மீட்கப்பட்டான். கவனக்குறைவாக டிராக்டரை இயக்கியதாக ஜோன் இன்பராஜ் மீது பகண்டை கூட்டு சாலை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

The post 90 அடி கிணற்றில் டிராக்டருடன் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: