பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 9 வயது சிறுமியின் சடலம் சூட்கேசில் மீட்பு: டெல்லியில் கொடூரம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் வடகிழக்கு நேரு விஹார் பகுதியில், 9 வயது சிறுமி ஒருவர் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசார் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த சில தினங்களுக்கு முன் நேரு விஹார் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் தனது உறவினர் ஒருவரைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை தேடத் தொடங்கியுள்ளார்.

அப்போது, சிறுமி தங்கள் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை நோக்கிச் சென்றதாக ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு சென்ற தந்தை, இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு வீடு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு, பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அங்கு, ஒரு சூட்கேஸிற்குள் தனது மகள் நிர்வாண நிலையில், அசைவற்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் மகளை உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். ஆனால், சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தக் கொடூர சம்பவம் குறித்து தயாள்பூர் காவல் நிலையத்திற்கு அன்றிரவு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது முகத்தில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்ததோடு, அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, பிஎன்எஸ் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. குற்றவாளியைக் கண்டறியவும், ஆதாரங்களைத் திரட்டவும் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 9 வயது சிறுமியின் சடலம் சூட்கேசில் மீட்பு: டெல்லியில் கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: