இந்நிலையில், நேற்று நடந்த கடைசி சுற்றுப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகேசியுடன் மோதினார். இப்போட்டியில் எரிகேசியில் கை ஓங்கியிருந்தபோதும், சாமர்த்தியமாக போட்டியை டிரா செய்தார் கார்ல்சன். அதனால் புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளுடன் அவர் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக தட்டிச் சென்றார். மற்றொரு 10வது சுற்றுப் போட்டியில் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் பேபியானோ கரவுனாவிடம் தோல்வியை தழுவி அதிர்ச்சி தந்தார். அதனால் அவர், 14.5 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்தார். வெற்றி பெற்ற கரவுனா 15.5 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்தார். மற்றொரு அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா 14 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், இந்திய வீரர் எரிகேசி 13 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும், சீன வீரர் வெ யி 9.5 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும் இருந்தனர்.
மகளிர் கிளாசிகல் செஸ் பிரிவில் உக்ரைன் வீராங்கனை அன்னா மாஸிசுக் 16.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். அவர் கடைசி சுற்றில் இந்திய வீராங்கனை வைஷாலியிடம் தோல்வியை தழுவியபோதும் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடித்தார். இந்திய கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பி, சீன வீராங்கனைக்கு எதிரான கடைசி சுற்றுப் போட்டியில் டிரா செய்ததால், 15 புள்ளிகளுடன் 3ம் இடமே பெற முடிந்தது. இப்போட்டியின் முடிவில் சீன வீராங்கனை லெ டின்ஜீ 16 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்தார். மற்றொரு சீன வீராங்கனை ஜு வென்ஜுன் 13.5 புள்ளிகளுடன் 4ம் இடத்தையும், தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபு 11 புள்ளிகளுடன் 5ம் இடத்தையும் பிடித்தனர்.
The post நார்வே கிளாசிகல் செஸ்: மேக்னஸ் கார்ல்சன் 7ம் முறை சாம்பியன்; குகேஷ் அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.