சென்னையில் பிராட்வே டான் போஸ்கோ பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா உரையாற்றினார். சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜூம்மா மஸ்ஜித் மசூதியில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் பங்கேற்றார். இதேபோல சென்னை தீவுத்திடல், திருவல்லிக்கேணி பெரிய மசூதி, பெரியமேடு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை திடல்களில் நடந்தது. சென்னை மண்டலத்தில் அனைத்து கிளைகளிலும் தியாகத்திருநாள் சுமார் 100 இடங்களுக்கு மேல் தொழுகை நடந்தது. மண்ணடி பின்னி கார் பார்க்கிங் திடலில் நடந்த தொழுகையில் மாநிலத் துணைத் தலைவர் தாவூத் கைசர் பங்கேற்று பெருநாள் சிறப்புரையாற்றினார். பெருநாள் தொழுகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து பங்கேற்றனர். தொழுகையை முடித்து வீடு திரும்பிய இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுத்தனர். இவற்றில் 3ல் 2 பங்கை ஏழைகளுக்கு கொடுத்தனர். உறவினர், நண்பர்களுக்கு மதியம் பிரியாணி விருந்து படைத்தனர். பக்ரீத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து பிரியாணி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.
The post தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித்தழுவி ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் பரிமாறினர்; ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது appeared first on Dinakaran.