அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்குள் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை விரட்டியடிக்க கடந்த 1984ம் ஆண்டு ஜூன் 6ல் ராணுவம் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் புளூஸ்டார் என்ற ராணுவ நடவடிக்கையில் பொற்கோயிலுக்குள் இருந்த காலிஸ்தான் தீவிரவாதி ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்களும் பலர் உயிர் இழந்தனர். இதன் 41வது ஆண்டு தினத்தையொட்டி நேற்று சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே உள்ள பகுதியில் அமைதியான முறையில் பந்த் அனுசரிக்கப்பட்டது. தல் கல்சா அமைப்பை சேர்ந்தவர்கள் பிந்த்ரன்வாலேயின் புகைப்படத்தை கையில் வைத்திருந்தனர். அதே போல் காலிஸ்தான் கொடியையும் வைத்திருந்தனர். பொற்கோயில் வளாகத்திற்கு அருகே உள்ள பகுதிகளில் முன்னாள் எம்பி சிம்ரன்ஜித் சிங் மான் தலைமையிலான தல் கல்சா அமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் திரண்டு நின்றிருந்தனர். அவர்கள் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின் 41வது ஆண்டு தினம்: பொற்கோயில் அருகே காலிஸ்தான் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு appeared first on Dinakaran.