உலகிலேயே மிகவும் உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: தேசிய கொடியுடன் நடந்து சென்றார்

கத்ரா: ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் மூலம் இணைக்கும் நோக்கில் 42 ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்ட மிகப்பெரிய நீண்ட கால பணி இதன் மூலம் நிறைவேறி உள்ளது. செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.

நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதற்காக உதம்பூர் விமான நிலையம் வந்த பிரதமர், பின்னர் அங்கிருந்து செனாப் பாலம் பகுதிக்கு வருகை தந்தார். அவருடன் முதல்வர் உமர் அப்துல்லா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு பாலத்தில் நடந்து சென்றார். மேலும், பாலத்தை திறந்துவைத்த பிரதமர் மோடி, பாலம் அமைக்க காரணமாக இருந்த பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா சுற்றுலா வேலைவாய்ப்பை வழங்குகிறது. மக்களை இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் மனிதநேயம், நல்லிணக்கம் மற்றும் சுற்றுலாவின் எதிரி. அது மட்டுமல்ல, ஏழைகளின் ரொட்டி மற்றும் வெண்ணெய்க்கும் பாகிஸ்தான் எதிரி. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்தது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பஹல்காமில் மனிதநேயமற்ற முறையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவில் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுவதே பாகிஸ்தானின் நோக்கமாக இருந்தது.

காஷ்மீர் மக்களின் வருவாயைப் பறிக்க அது விரும்பியது. அதனால்தான் சுற்றுலாதலத்தில் பாகிஸ்தான் தாக்கியது. சுற்றுலாவை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க பாகிஸ்தான் விரும்பியது. பயங்கரவாதிகளுக்கு சவால் விடுத்து, அவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட அடில் என்பவர் தனது வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காகவும் அங்கு இருந்தார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை இந்தியப் படைகள் அழித்து ஒரு மாதம் ஆகிறது. ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தான் கேட்கும்போதெல்லாம், அதன் வெட்கக்கேடான தோல்வியை அது நினைவுபடுத்தும்.

உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை திட்டம் புதிய மற்றும் அதிகாரம் பெற்ற காஷ்மீரின் சின்னம். இந்தியாவின் வளர்ந்து வரும் வலிமையின் ஒரு எதிரொலிக்கும் பிரகடனம். செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் காஷ்மீரின் செழிப்புக்கான நுழைவாயில்களாக செயல்படும். இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து இப்பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் போக்குவரத்து (யுஎஸ்பிஆர்எல்) திட்டத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆஞ்சி ஆற்றின் குறுக்கே, கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின்பு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீருக்கு வருகை தந்திருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

* என்னை யூனியன்பிரதேச முதல்வராக பதவி இறக்கம் செய்து விட்டீர்களே? மோடி முன்பு உமர் அப்துல்லா ஆதங்கம்
செனாப் பாலம் திறப்பு விழாவில் பேசிய காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா,’இந்த ரயில் சேவை ஜம்மு காஷ்மீரின் நீண்ட கால கனவு. இத்திட்டத்தை நிறைவேற்ற பலர் கனவு கண்டார்கள். ஆங்கிலேயர்கள்கூட கனவு கண்டார்கள். இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது நான் 8ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இப்போது எனக்கு 55 வயது. இறுதியில் இந்தப் பாலம் திறக்கப்பட்டுவிட்டது. நான் ஒரு மாநில முதல்வராக இருந்து, தற்போது ஒரு யூனியன் பிரதேசத்தின் முதல்வராக பதவி இறக்கம் செய்யப்பட்டதாக உணர்கிறேன். ஆனால், இது சரிசெய்யப்பட அதிக நேரம் எடுக்காது என்று நான் நம்புகிறேன்.பிரதமரின் கைகள் மூலம், காஷ்மீர் மீண்டும் ஒரு மாநிலமாக அதன் நிலையை மீண்டும் பெறும்’ என தெரிவித்தார்.

The post உலகிலேயே மிகவும் உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: தேசிய கொடியுடன் நடந்து சென்றார் appeared first on Dinakaran.

Related Stories: