அம்பை அருகே ஸ்டியரிங் கட் ஆனதால் தாறுமாறாக ஓடிய அரசு டவுண் பஸ் வயலுக்குள் பாய்ந்தது

*பெண் பரிதாப பலி ; 10 பேர் காயம்

முக்கூடல் : அம்பை அருகே இடைகால் பகுதியில் ஸ்டியரிங் கட் ஆனதால் தாறுமாறாக ஓடிய அரசு டவுண் பஸ் வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை இடைகாலை சேர்ந்த ஓட்டுநர் முருகேஷ் என்பவர் ஓட்டினார்.

சுமார் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். காலை 11 மணியளவில் அம்பை அருகே இடைகால் விலக்கு அருகே பஸ் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் உள்ள வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். 9 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அருகிலிருந்த பொதுமக்கள் படுகாயமடைந்த அனைந்தநாடார்பட்டியை சேர்ந்த முத்தப்பா மனைவி ஜெயலெட்சுமி (42), கபாலிபாறையை சேர்ந்த சுசிலா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் ஜெயலெட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பஸ் ஸ்டியரிங் கட் ஆனதால் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

5 நிமிடத்தில் பறிபோன உயிர்

ஆலங்குளத்தில் இருந்து டவுண் பஸ் பாபநாசம் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த டவுண் பஸ் காலை 10.55 மணிக்கு அனைந்தநாடார்பட்டிக்கு வந்தது. அப்போது ஜெயலெட்சுமி பஸ்சில் ஏறியுள்ளார்.

சரியாக 11 மணியளவில் பஸ் இடைகால் விலக்கு அருகே சென்ற போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். அணைந்தநாடார்பட்டியில் பஸ்சில் ஏறிய 5 நிமிடத்தில் விபத்தில் சிக்கி ஜெயலட்சுமி பலியான சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post அம்பை அருகே ஸ்டியரிங் கட் ஆனதால் தாறுமாறாக ஓடிய அரசு டவுண் பஸ் வயலுக்குள் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: