புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை, ஜூன் 6: புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தின விழாவில் மாணவர்கள் முன்னிலையில் பசுமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழாவிற்கு முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் தலைமை வகித்து பேசினார். அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், ஐக்கிய நாடுகள் சபை 2025ம் ஆண்டில் அறிவித்துள்ள உலக சுற்றுச்சூழல் தின கருப்பொருளான நெகிழி மாசுபாட்டினை முற்றிலும் குறைப்போம் என்ற கருத்தை மையமாக வைத்தும் நெகிழியின் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார். மாணவச் செல்வங்கள் இனி வரும் காலங்களில் நெகிழி பயன்பாட்டை குறைத்து மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்தவும், நெகிழி இல்லா பள்ளி வளாகமாக மாற்றிடவும், சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

முன்னதாக பள்ளியின் முதல்வர் சிவப்பிரகாசம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் சுற்றுச்சூழல் தின விழாவில் பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். பசுமைக் குழு உறுப்பினர் பேராசிரியர் விஸ்வநாதன் மரம் இயற்கை தந்த வரம், மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை சூழலை பாதுகாப்பது குறித்து பேசினார். அதனை தொடர்ந்து வனச்சரக அலுவலர் சதாசிவம் மற்றும் வனத்துறையினர் ஏற்பாட்டில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.

மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் வெங்கடசுப்பிரமணியன் நெகிழியை ஒழித்து மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்த மாணவர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார். பள்ளியின் உதவி முதல்வர் இன்பராஜ் நன்றி உரையாற்றினார். பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள், தேசிய பசுமைப் படை மாணவர்கள் உட்பட அனைத்து மாணவ, மாணவியரும் பங்கேற்றனர்.

The post புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: