பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புபடுத்திய விவகாரம் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு: யூடியூப் சேனல்கள் பதில்தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களை தொடர்புபடுத்திய விவகாரத்தில் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தங்களை தொடர்பு படுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க கோரியும், 1 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க கோரியும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜரானார். அப்போது, அவர் வழக்கில் சம்பந்தப்படாத ஒருவரை இணைத்து பதிவு வெளியிடுவது அவதூறு பரப்புதலாகும்.

தனி உரிமை, அந்தரங்கம், மதிப்பு ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதை கருத்து சுதந்திரம் என்று கருத முடியாது. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அந்த வழக்கில் மனுதாரரை சேர்க்கும் வகையில் செய்தி வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகும். அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை பொறுப்பில்லாமல் பயன்படுத்த கூடாது. பத்திரிகை சுதந்திரத்தை உரிமை என்று கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெரிவித்துள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து, யூடியூப் சேனல்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு வரும் 12ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளிவைத்தார். அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என இரு தரப்பினருக்கும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

The post பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புபடுத்திய விவகாரம் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு: யூடியூப் சேனல்கள் பதில்தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: