கோபி, ஜூன் 5: கோபியில் புல்லட் பைக்குகள் வாங்கியும் ஷோரூமில் பதிவு செய்து தராததால், அதனை ஓட்ட முடியாத நிலையில் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் கோபி காவல் நிலையத்தில் புகார் செய்ய குவிந்தனர். பல்வேறு விலைகளில் பல மாடல்களில் சுமார் 2.50 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை புல்லட் பைக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கோபி ஷோரூமை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த தீனு சிவசங்கர் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் சுமார் 100க்கும் மேற்பட்ட புல்லட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன.
இந்த நிலையில், வாகனங்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் கட்டணம் செலுத்தி, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவெண் பெற்று தராமல் ஷோரூம் ஊழியர்கள் இருந்துள்ளனர். இதனால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிய பைக்கை ஓட்ட முடியாத நிலையில் பைக் வாங்கியவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷோரூம் சென்றபோது, ஷோரூமை மூடிவிட்டு அதன் உரிமையாளர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், ஷோரூம் ஊழியர்களை தொடர்பு கொண்டபோது அவர்களும் உரிய பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில் பல லட்சம் ரூபாய் செலுத்தி வாங்கப்பட்ட பைக்கை ஓட்டிச்சென்ற போது, பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்யவே அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் ஆசை, ஆசையாக வாங்கிய பைக்கை வீட்டில் நிறுத்தி வைத்து உள்ளனர். கடன் வாங்கி பெற்ற பைக்கை ஓட்ட முடியாத நிலையில் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் கோபி போலீஸ் ஸ்டேஷனில் பைக்குகளை ஒப்படைத்துவிட்டு, ஷோரூம் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்து உள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கூறும்போது, ‘‘இதுவரை வாகனத்தை பதிவு செய்து தரவில்லை. இந்த ஷோரூமில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களை ஷோரூம் இ மெயில் மூலமாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மெயில் அனுப்பினால் மட்டுமே வாகனங்களை பதிவு செய்ய முடியும். ஆனால் ஷோரூம் உரிமையாளர் தலைமறைவானதால் வாகனங்களை பதிவு செய்ய முடியாமல் உள்ளது. அதேபோன்று சிலருக்கு நிதி நிறுவனங்கள் மூலமாக முழு தொகையும் செலுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு இதுவரை பைக் வழங்கவில்லை.
வாங்காத பைக்கிற்கு லோன் செலுத்தி வரும் நிலையும் உள்ளது. இதனால் வாகனங்களை பதிவு செய்து தர வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறோம்’’ என்றனர்.
The post கோபியில் ஷோரூம் உரிமையாளர் தலைமறைவு; புல்லட் வாங்கியும் ஓட்ட முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் appeared first on Dinakaran.