ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடர்பு; பஞ்சாப் யூடியூபர் அதிரடி கைது: பாக். ராணுவ அதிகாரிகளை சந்தித்தது அம்பலம்

சண்டிகர்: பஞ்சாபைச் சேர்ந்த யூடியூபர் ஜஸ்பிர் சிங் என்பவர், அரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபரும், தற்போது உளவு துறை தகவலின் அடைப்படையில் கைதாகி உள்ள ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஜஸ்பிர் சிங், பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் மாவட்டத்தின் மஹ்லான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தனது ‘ஜான் மஹால்’ என்ற யூடியூப் சேனல் மூலம் பாகிஸ்தான் உளவு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரது யூடியூப் சேனலை 11 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். பாக். உளவு அதிகாரி ஷகீர் என்ற ஜூட் ரந்தாவாவுடன் தொடர்புடையவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2020, 2021 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை பாகிஸ்தானுக்கு அவர் பயணம் செய்துள்ளார். அங்கு பாக். ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அவரது மின்னணு சாதனங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த பலரது தொலைபேசி எண்கள் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த எண்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஜோதி மல்ஹோத்ராவின் கைதுக்குப் பிறகு, ஜஸ்பிர் சிங் தனது பாக். தொடர்புகளை மறைக்க முயன்று, அதை அழிக்க முயற்சி செய்ததாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள பாக். உயர் தூதரகத்தில் இருந்து இந்தியாவால் வெளியேற்றப்பட்ட அதிகாரி டேனிசுடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மொகாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

The post ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடர்பு; பஞ்சாப் யூடியூபர் அதிரடி கைது: பாக். ராணுவ அதிகாரிகளை சந்தித்தது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: