ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அரசு பதவி; நீதித்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும்: தலைமை நீதிபதி கவாய் கருத்து

புதுடெல்லி: நீதித்துறையின் சட்டப்பூர்வமான தன்மை மற்றும் பொது நம்பிக்கையை பேணுதல் என்ற தலைப்பில் இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த வட்டமேசை மாநாட்டில் இந்தியாவின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியதாவது:
ஒவ்வொரு அமைப்பும் எவ்வளவு வலுவானதாக இருந்தாலும் தொழில்முறை முறைகேடு தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாகிறது. துரதிஷ்டவசமாக நீதித்துறையிலும் ஊழல் மற்றும் முறைகேடு சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகைய நிகழ்வுகள் மக்களின் நம்பிக்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் ஒட்டுமொத்த நீதித்துறையின் நேர்மையின் மீதான நம்பிக்கையை சிதைக்கின்றன. இருப்பினும் இந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான, உடனடி நடவடிக்கைகள் இந்தியாவில் எடுக்கப்பட்டு வருகிறது.

நீதித்துறை சந்திக்கும் இன்னொரு பிரச்னை, ஓய்வுக்குப் பிறகு அரசு பதவிகளை ஏற்பது. இந்தியாவில், நீதிபதிகள் ஓய்வு பெற்ற உடனேயே அரசு நிர்வாகத்தில் உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டாலோ, தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்தாலோ அது குறிப்பிடத்தக்க கவலைகளை ஏற்படுத்துகிறது. இது பொதுமக்கள் மத்தியில் நீதித்துறையின் நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நானும் எனது சக நீதிபதிகள் பலரும் ஓய்வுக்குப் பிறகு எந்த அரசு பதவிகளையும் ஏற்கமாட்டோம் என்று பகிரங்கமாக உறுதியளித்துள்ளோம். இது நீதித்துறையின் நம்பகத்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அரசு பதவி; நீதித்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும்: தலைமை நீதிபதி கவாய் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: