உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பேப்பரில் பஜ்ஜி, போண்டா மடித்து கொடுக்கக்கூடாது: சிக்கன்-65, கோபி-65 போன்றவற்றில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது; 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் பஜ்ஜி, போண்டா போன்ற உணவுப் பொருட்களை பரிமாற கூடாது என்பது உள்ளிட்ட 14 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக உணவு பாதுகாப்புத் துறை வெளியிடப்பட்டுள்ளது. உணவகங்களில் பின்பற்ற வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:
1. அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி, மருத்துவத் தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
3. உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரைப் பகுப்பாய்வு செய்து, பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும்.
4. உணவுப் பொருட்களை ஈக்கள்/பூச்சிகள் மொய்க்காதவண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும்.
5. உணவு எண்ணெயை ஒருமுறை மட்டுமே சமைக்க பயன்படுத்த வேண்டும். மீதமான பயன்படுத்திய உணவு எண்ணெயை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அங்கீகரித்த கொள்முதலாளருக்கு மட்டும் விற்க வேண்டும்.
6. விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்திட வேண்டும்.
7. நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ/ பொட்டலமிடவோ கூடாது.
8. அனுமதிக்கப்படாத நெகிழியில் (பிளாஸ்டிக்) உணவுப் பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக் கூடாது.
9. உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர்/அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்படாத நெகிழியினை (பிளாஸ்டிக்) பயன்படுத்தக் கூடாது.
10. எவ்வகை உணவு எண்ணெய்களையும் லேபிள் விவரங்களின்றியும் பொட்டலமிடாமல் சில்லரை அடிப்படையிலும் நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது.
11. உணவைக் கையாளுபவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்.
12. பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களை கொள்முதல் விற்பனை செய்யும் போது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உரிம எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விவரங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
13. உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகங்கள்/பேக்கரி/இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக்கூடாது.
14. சிக்கன்-65, பஜ்ஜி, கோபி-65 போன்ற உணவுப் பொருட்களில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு குறித்தான புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணுக்கு அல்லது தமிழக உணவு பாதுகாப்புத் துறை செயலியை பயன்படுத்தலாம்.

The post உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பேப்பரில் பஜ்ஜி, போண்டா மடித்து கொடுக்கக்கூடாது: சிக்கன்-65, கோபி-65 போன்றவற்றில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது; 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: