குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

சென்னை : குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி சட்டமன்றத்தில், விதி எண் 110-இன் கீழ் மாநில சிவில் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில், ” ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால், சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் பத்து கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

அன்றைய தினமே, “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட “C” மற்றும் “D” பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால் சுமார் நான்கு இலட்சத்து எழுபத்து ஓராயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும்.” எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு அரசு மாநில சிவில் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பண்டிகை முன்பணத்தை 4,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதேபோல், C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், பண்டிகை முன்பணம் உயர்வு இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வரும். இந்த ஆணை வெளியிடப்பட்ட நாளுக்கு பிறகு கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு பொருந்தும். இப்பண்டிகை முன்பணமானது பத்து மாதங்களுக்கு சமமான தவணைகளில் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு!! appeared first on Dinakaran.

Related Stories: