சமூக விரோத ஆளுமைக் கோளாறு விரிவான பார்வை

நன்றி குங்குமம் டாக்டர்

அகமெனும் அட்சயப் பாத்திரம்

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

சமூக விரோத ஆளுமைக் கோளாறு (Anti-Social Personality Disorder) அமெரிக்கன் சைக்கியாட்ரிக் அசோசியேஷன் வரையறுத்துள்ள ஆளுமைக்கோளாறுகளின் பட்டியலில் B தொகுப்பில் இடம்பெறுகின்றது. அடிப்படையான நன்னெறி, ஒழுக்க மதிப்பீடுகள் (Ethics/Moral values) ஆகியவற்றில் குறைபாடு,சமூகத்தில் வரையறுக்கப்பட்ட முறைமைகளைப் பின்பற்றவே இயலாததன்மை போன்றவை சமூக விரோத ஆளுமைக்கோளாறின் பண்புகள் ஆகும். கூடுதலாக, மற்றவர்களைத் தயக்கமோ வெட்கமோ இன்றி மனத்திரிபு (Manupulate) செய்வதும், சிறுவயதிலிருந்தே நடத்தைக் கோளாறுகளை வெளிப்படுவதும் இதன் ஆதிக்க இயல்புகளாகும்.

நாம் ஏற்கனவே பகிர்ந்துள்ளதைப்போல் அதீத நேர்மையாக இருந்து சமூகத்தாலோ, உறவுகளாலோ ஏமாற்றப்பட்டவர்கள் அந்த வலியிலிருந்து மீள்வதற்காக முன்னெடுக்கும் எதிர்வினையே சமூக விரோத செயலாகிறது. இவ்வாறு பழி வாங்குவதற்காக போராட்ட மனநிலையோடு சமூக விரோதிகளாக மாறுவதை பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ராபின் ஹூட் கதைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

கிராமத்தில் மிக நேர்மையாக இருந்தவன் தவறான நபரை நம்பி நிதி நிறுவனம் நடத்தி ஏமாற்றப்பட்டு சிறைக்கு சென்று பிறகு வெளியே வந்து தவறானவர்களை கொலை செய்து பழிவாங்கும் நேர்மையின் வலியை மகாநதி திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம். எனவே, நேர்மை பாதிக்கப்படும் பொழுது அது எவ்வாறு எதிர்மறை விளைவுகளை கொண்டு வரும் என்பதை புரிந்து கொண்டு நேர்மைக்கு உரிய நேரத்தில் மதிப்பு கொடுப்பது மிக அவசியம். நம்மைச் சுற்றி நேர்மையானவர்கள் இருந்தால் அவர்களைப் புறக்கணிப்பு செய்வது, கேலி செய்வது போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அக்கறையோடு நேர்மையின் எதிர்பார்ப்பை ஒரு சமநிலையில் வைத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

அது என்ன நேர்மையின் சமநிலை ? சிலவற்றை மாற்ற முடியாது எனும்போது அதனை ஏற்றுக் கொள்வதே இயல்பான எளிய வாழ்க்கைக்கு துணையாக இருக்கும். ஏனென்றால் 100% பிழைகள் இன்றி வாழ்வது எவருக்குமே சாத்தியமில்லை இல்லையா? இதுவே அதீத நேர்மையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டியது.விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய அதீத நேர்மை Vs அதீத சமூக விரோதம் என்ற இரண்டுக்குமான நேரடியான தொடர்பைப் புரிந்து கொள்ள வேண்டும். சமூக விரோதிகளாக உருவாகியவர்கள் ஒரு காலத்தில் மிக நேர்மையாளர்களாக இருந்திருக்கக்கூடும். விடாமுயற்சி படத்தில் நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகை ரெஜினா கதாபாத்திரங்கள் காரணமின்றியும் சிலர் எதிர்மறையாக, சமூக விரோதிகளாக திரியக்கூடும் என்பதைக் காட்டியுள்ளனர்.

ஆனால் இவ்வாறு திரைப்படங்களில் மனக்கோளாறுகள் அதீதமாகக் காட்டபபடும்போது மிகவும் ரசிக்க கூடியவையாகின்றன. இப்படி நாம் நடந்துகொள்ளக் கூடாது என்று உணர்வதைவிடவும் ‘ இப்படி நாமும் இருக்கலாம் போலிருக்கிறதே ‘ என்று பெரும் ஈர்ப்பை கொடுக்கக் கூடியவையாகிவிடும் ஆபத்து உள்ளது. திரைப்படங்கள் மட்டுமல்ல பல்வேறு காட்சி ஊடகங்கள், புனைவுக் கதைகள்கூட சமூக விரோத செயல்களையே தொடர்ந்து காட்டுகின்றபோது குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. இளைய தலைமுறையை என்று நேர்மைக்கு எதிராகவே அவை தூண்டுகின்றன என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். அதுவரை நல்ல மாற்றம் எல்லாம் கிட்டாக்கனியே.

சமூக விரோத செயல்கள் எனபதில் பிறரை ஏமாற்றுவது, மனத் தந்திரங்கள் செய்து குழப்புவது, பிளாக்மெயில் செய்வது , நம்பிக்கை துரோகம் செய்வது, போதை பழக்கங்களை மேற்கோள்வது இவையெல்லாம் அடங்கும் . மேலும், எல்லையற்ற சமூக விரோதச் செயல்கள் வன்புணர்வு, கொள்ளை, கொலை, தொடர் கொலைகள் என்றும் பல காலமாக வாசித்தும் கேட்டும் இருக்கிறோம்.

எனவே, இத்தகு சமூக விரோத ஆளுமை பண்புகளைக் கொண்டிருப்பவர்களின் செயல்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய தூண்டுதல் காரணியை அறிவது உளவியலில் மிகவும் முக்கியத்துவமான ஒன்றாக சொல்லப்படுகிறது. அதாவது Mal – Adaptive Behaviour எனும் தவறான நடத்தைக் கோளாறு முதலில் எங்கு எப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்டது என்று தூண்டுதல் புள்ளியை ( Triggering point) அறிவதே ஆரம்பகட்ட சிகிச்சையாகும்.

துளியும் இரக்கமின்றி சிறிய குழந்தைகளை பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்குபவர்கள் சில திரைப்படங்களில் காட்டுவது போல் கடினமான தோற்றங்களை எல்லாம் கொண்டிருக்க மாட்டார்கள். பெரும்பாலும் அவர்கள் நம்மைப் போலவே நம்மோடு சாதாரண மனிதர்களாக உண்ணுவது, உடுத்துவது எல்லாவற்றிலும் பணியிடங்களிலும் இயல்பாகவே இருப்பார்கள். அவர்களின் தூண்டுதல் காரணியைத் தொடும்பொழுது சில குறிப்பிட்ட நேரங்களில் அவர்களின் சமூக விரோத தன்மை வெளிப்பட்டு விடும்.

பல நேரங்களில் திட்டமிடப்படாமலேயே அவர்கள் சமூக விரோதிகளாகலாம். எனவே இதன் முன் அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம். ஆனால் அது மிகவும் கடினம் என்பதால் பல நேரங்களில் குற்றம் நிகழ்ந்த பிறகே சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. Psychopath எனும் குரூரப்பண்பின் ஆதிக்கம் கொண்டவர்களுக்கு அடுத்தவருக்கு ஏற்படும் வலி குறித்து விழிப்புணர்வு தோன்றாது. பிறரின் துன்பத்தில் மகிழ்ச்சி அடைவது எனும் நிலை இருக்கும். இவ்வாறானவர்களை முறையான உளவியல் பயிற்சிகள் நடத்தை பயிற்சிகள் மூலம் சரி செய்ய வேண்டும்.

ஒருமுறை சமூக விரோத செயலில் ஈடுபட்டு விட்டால், அவருக்கான தண்டனையை சட்டம் வழங்கும். ஆனால் அது அவரை மேலும் கடினமாக்கி சமூகத்திற்கு எதிரானவராக உருவாக்கவும் வாய்ப்பு அதிகம். எனவே அவர்களையும் குறிப்பிட்ட ஒரு காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று இனம் கண்டு தகுந்த உளவியல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்வதே மனிதத்தன்மையின் அடையாளம். ஏனெனில் நாம் அனைவரிடத்திலும் சமூக விரோதத் தன்மைகளே உள்ளன.

மனிதர்கள் நேர்மறை- எதிர்மறை ஆகிய இரண்டு விதமான பண்புகளையும்தான் கொண்டிருக்கிறோம்.Nomadic எனப்படும் தனிமையை அதிகமாக விரும்பி விலகி இருக்கும் நாடோடித்தன்மை , Coward எனப்படும் கோழைத்தன்மை அதிகரிக்கின்றபோது உருவாகும் பொறாமைதன்மை, Risk taking Behavior எனும் தனக்கு ஆபத்து விளைவிக்ககூடிய செயல்களில் ஆர்வமாக ஈடுபடும்தன்மை இவையெல்லாம் சமூக விரோத பண்புகளே. அடுத்த நிலைகளில் Reputation dependance எனப்படும் சமூக அந்தஸ்தைக் காக்கும் விழைவு தான் உயர்வான நிலையை அடைவதற்காக எந்த விதமான தவறான செயல்களில் ஈடுபடுவதும் சரியே என்ற மனநிலைக்குத் தள்ளிவிடும்.

இவ்வாறு சுயநல நோக்கங்களோடு நேர்மையை விட்டுக் கொடுத்தவர்கள் முதலில் தான் செய்ததை ஒப்புக்கொள்ள வேண்டும். இது தவறு, இதனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை வந்தால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும்.மாற்றம் வேண்டுமெனில் தான் செய்துவிட்ட சமூக விரோதச் செயல் குறித்த குற்றவுணர்வு இயல்பாக எழவேண்டும்.

அதன்பிறகு உளவியல் சிகிச்சையாளரை நாடி நடத்தை சீர்படுத்துதல் ( Behavioural Therapy ) எடுத்துக் கொள்ளும் போது பலன் கிடைக்கும். தீர்வு உடனயாக ஏற்படாது என்றாலும் ஓரளவு கட்டுக்குள் நிலைமையை கொண்டு வந்து மெல்ல மெல்ல அவர்களும் இயல்பான வாழ்க்கை முறைக்கு அவர்களும் திரும்ப இயலும் என்ற நம்பிக்கை வேண்டும். பயிற்சியை துவங்குவது மிகவும்
அவசியமாகும்.

வெளிப்படையான பகிர்வு, கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்ட Dialectical Therapy மிகவும் பயன் தரும். சிகிச்சையின் முதல் நிலையில் தான் யார், தன் வாழ்வின் கடந்த காலம், தன் குறிக்கோள் என்ன என தன்னை உணரச் செய்யும் Mentalization Theraphy மேற்கொள்வதும் பரிந்ரைக்கப்படும்.Rational Emotive Therapy எனப்படும் உணர்வுத் திறன்களை சமநிலைப்படுத்தும் பயிற்சியும் நல்ல பலனைத் தரும்.எது சரி/ எது தவறு போன்ற எண்ணக் குழப்பங்களை மாற்றிக் கட்டமைப்பது இந்த சிகிச்சையின் சிறப்பு அம்சமாகும்.ஆனால், மிக ஆபத்தான குணநலன்களைக் கொண்டிருப்பவரை உடனடியாக மனநலப் பயிற்சிக்குள் கொண்டு வந்து விட முடியாது. அவரை ஆயத்தப்படுத்தி கடுமையான எண்ணங்களின் பிடியிலிருந்து இளகச் செய்த பின்னரே சிகிச்சை முறைகளை துவங்க வேண்டும். இல்லையெனில் உளவியல் ஆலோசகருக்கே தீமை நிகழவும் வாய்ப்பு இருக்கிறது இல்லையா?

தவறு செய்வது மனித இயல்பு.ஒரு தவறுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு மனிதனை ஒதுக்கி விடக்கூடாது.எந்த ஒரு பிரச்சனைக்கும் முறையான தீர்வை மேற்கொள்ள வேண்டும் என்ற கனிவோடு சக மனிதர்களை அணுகுவோம். இச்சமூகம் நமக்கானது. இங்கே நிகழக்கூடிய நன்மை தீமை எல்லாவற்றிலும் நம்முடைய சிறு பங்கு இருக்கின்றது என்ற பொறுப்பினை உணர்ந்து கொண்டாலே நம்முடைய நேர்மைத் திறன் மேம்படும்.

அதை விடுத்து நான் நினைத்தது நடக்கவில்லை, ஏமாற்றம் ஏற்பட்டுவிட்டது, இங்கே எதுவும் சரியில்லை என்று சமூக விலகலை ( Social isolation ) ஏற்படுத்திக் கொண்டால் அது வாழ்வைச் சீரழித்துவிடும். திறமை மிக்க இளம் நடிகர் இயல்புக்கு மாறுபட்டு ஊடகத்தில் சில காணொளிகள் பதிவிட பலரும் பலவாறு அவரின் மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்ததை நினைவு கொள்ள வேண்டும். சில நொடிகளின் தடுமாற்றம் நம்மை மனநோயாளியாக, சமூக விரோதியாக பிறரின் பார்வையில் காட்டிவிடும். எனவே, விழிப்புணர்வோடு சமூக நல்லிணக்கத்தைப் பேணுவது முக்கியம்.

அறியாமல் ஒருமுறை ஏதேனும் தவறு செய்து விட்டால் அல்லது தவறு செய்யும் எண்ணம் எழுந்தால் எவ்வளவு விரைவில் அதிலிருந்து மீள முடியுமோ அவ்வளவு விரைவில் மீள்வது வேண்டும்.இதையே ‘தவறான ரயிலில் ஏறிவிட்டால் தடுமாறிக் கொண்டிருக்காமல் கூடிய விரைவில் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடுங்கள்’ என்று ஜப்பானிய பழமொழி வலியுறுத்துகிறது. அதிக நேரம் எடுத்துக்கொண்டால் திரும்ப வாய்ப்பே இல்லாமல் போய் விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

புகழ்பெற்ற அமெரிக்க கணிப்பொறி வல்லுநரும், வணிகருமான பில்கேட்ஸ் ‘சமூக விரோத எண்ணம் தோன்றுவது எதிர்மறைகள் விளைவுகளைத் தரக்கூடிய பலவீனமான ஒழுக்கம்’ என்கிறார்.அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விலக்கிக்கொள்ள வேண்டும். நாம் வாழும் நம் சமூகம் இது.. நம் குழந்தைகள் வளர்ந்து வாழப்போகும் சமூகம் இது என்று சிந்தித்து இதன் கட்டமைப்பை உருவாக்குவதில் நம்முடைய பங்கை உணர்ந்து செயலாற்றுவோம்.

The post சமூக விரோத ஆளுமைக் கோளாறு விரிவான பார்வை appeared first on Dinakaran.

Related Stories: