பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் தலைமறைவானவர் கைது

பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள பனையடிபட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன்(45). பாவூர்சத்திரம்-கடையம் ரோட்டில் சலூன் கடை வைத்துள்ளார்.

இவரது மனைவி உமா(37). இவர்களுக்கு 17, 16 வயதில் இரு மகன்கள் உள்ளனர். கடந்த 1ம்தேதி இரவு பக்கத்து ஊரில் நடந்த கபடி போட்டியை பார்த்து விட்டு அதிகாலை 3 மணிக்கு வந்துள்ளனர்.

அப்போது வீட்டுக் கதவை உமா திறந்ததும், மகன்கள் மாடியில் உள்ள அறைக்கு தூங்க சென்றுவிட்டனர். அதிகாலை 5.30 மணி அளவில் பரமசிவன் டீ குடிக்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த மர்மநபர் தூங்கிக் கொண்டிருந்த உமாவை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து பரமசிவன், பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். ஆலங்குளம் டிஎஸ்பி சகாயஜோஸ், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிக்குமார்(41) என்பவர் உமாவை கொலை செய்ததும், மணிக்குமாருக்கும் உமாவுக்கும் இடையேயான தகாத உறவு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து மணிக்குமாரை போலீசார் தேடி வந்த நிலையில் பனையடிப்பட்டி ஊருக்கு அருகில் உள்ள கோழி பண்ணையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் தலைமறைவானவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: