பக்ரீத் பண்டிகையை ஒட்டி களைகட்டிய ஆட்டுச் சந்தை.. ஆடுகள் வரத்து அதிகரிப்பு, விலையும் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!!

சிவகங்கை: பக்ரீத் பண்டிகை, தொடர் முகூர்த்த நாட்களையொட்டி சிவகங்கை, கள்ளக்குறிச்சி, நெல்லை மாவட்ட கால்நடை சந்தையின் விற்பனை களைகட்டியது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தையில் 5,000க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் விற்பனையாகின. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவர். அதை தொடர்ந்து வருகின்ற 7ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் சந்தைக்கு ஏராளமான மக்கள் ஆடுகளை வாங்க குவிந்தனர். ஆடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தாலும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர். குறிப்பாக 35 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.40,000க்கு விற்பனையானதால் விவசாயி மகிழ்ச்சி அடைந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.2.40 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று நடைபெற்ற சந்தையில் அதிகளவில் செம்மறி, வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தைக்கு ஏராளமானோர் வந்திருந்த நிலையில், நாகர்கோவில் நெடுஞ்சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்ததால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து சென்றனர்.

The post பக்ரீத் பண்டிகையை ஒட்டி களைகட்டிய ஆட்டுச் சந்தை.. ஆடுகள் வரத்து அதிகரிப்பு, விலையும் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!! appeared first on Dinakaran.

Related Stories: