ஆத்யாத்மிகம் என்றால் நம்முடைய கர்மாவினாலேயே நாம் அனுபவிக்கும் கர்மா. ஆதி பௌதீகம் என்றால் பிற உயிர்களால் நமக்கு ஏற்படும் பிரச்னை. அதனால் வருகின்ற கர்மா. ஆதி தைவிகம் என்றால் இயற்கையினால் அது நீர், நெருப்பு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படியாக மூன்று விதமாக கர்மா செயல்படுகின்றது. இந்த மூன்று கர்மாவினால் இந்த பத்து இந்திரியங்கள் செயல்படுகின்றது அல்லவா… இப்போது இந்த மூன்று கர்மா எங்கெங்கு செயல்படும்.
எங்கெங்கு இந்த கர்மா செயல்படுகின்றதெனில், நம்முடைய வாக்கில் செயல் படும். அதற்கடுத்து நம்முடைய சரீரத்தில் செயல்படும். அதற்கடுத்து நம்முடைய செயல்படும். இவை, ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் என்கிற மூன்று தாபங்கள் வழியாகச் செயல்படுகின்றன. இப்படி மூன்று விதங்களாக செயல்படும்போது பாதிக்கப்படப் போவது எதுவென்றால் நம்முடைய இந்திரியங்கள்தான். இப்போது இனி சொல்லப் போகும் விஷயங்களைக் கவனமாகக் கவனிக்க வேண்டும். நமக்குப் பத்து இந்திரியங்கள் உள்ளன. இந்த பத்து இந்திரியங்களுக்கும் மூன்று விதமாக பாதிப்புகள் வருகின்றன. அப்போது பத்தை மூன்றால் பெருக்கினால் முப்பது வருகின்றதா.
வாக்கு வழியாகச் சில அஞ்ஞான விருத்திகள் நடக்கும்போது ஒரு பத்து இந்திரியங்கள். ஆதி பௌதிகமாக சரீரத்தின் வழியாக இன்னொரு பத்து இந்திரியங்கள். ஆதி தைவிகம் என்று மனதின் வழியாக மூன்றாவது பத்து. இப்படியாக வாக்கு, சரீரம், மனம் வழியாக பெருகும் கர்மாவின் வழியாக நம்முடைய இந்திரியங்களை தாக்கி, அந்த இந்திரியங்கள் அஞ்ஞான வசப்படும்போது இந்த மூன்று விதங்
களில் பத்து இந்திரியங்களும் செயல் படுவதால் முப்பது விதமான அஞ்ஞான விருத்திகள் நமக்குள் செயல்படுகிறது.
இந்த முப்பது விதமான அஞ்ஞான விருத்திகள்தான் முப்பது பண்டாசுரனுடைய புத்திரர்கள். பண்டாசுரனுடைய முப்பது புத்திரர்கள். இந்த முப்பது அஞ்ஞான விருத்திகள். ஒரு ஆத்மீக சாதகன் மூல அஞ்ஞானத்திலிருந்து ஞானத்தை நோக்கிப் போகும்போது, இந்த இந்திரியங்களினால் செயல்படக் கூடிய விஷயங்களெல்லாம் மிக மிகச் சிறியது. ஆனால், சாதனையின் தொடக்க காலத்தில் இதெல்லாம் பெரிய தடையை ஏற்படுத்தும். ஆனால், மொத்தமாக அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு ஞானத்தை நோக்கிப் போகிறோம் அல்லவா… அப்படிப் போகும்போது இதெல்லாம் சிறியதாகத் தெரியும்.
இப்போது இங்கு ஒரு சூட்சுமம் வருவதைப் பாருங்கள். பண்டாசுரன் என்பவன் மூல அஞ்ஞானமாக இருக்கிறான். பண்டாசுரன் என்பவன் பெரிய அஞ்ஞானமாக இருக்கிறது. அந்த அஞ்ஞானத்திலிருந்து வந்த இந்த விருத்திகளெல்லாம் அவனுடைய குழந்தைகளாக… அவனுடைய புத்திரர் களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த சின்னச் சின்ன அஞ்ஞான விருத்திகளை சம்ஹாரம் செய்வதற்கு ஞான சொரூபிணியாக இருக்கக் கூடிய, அம்பாள் யாரை அனுப்புகிறாளெனில், தன்னுடைய சின்ன சொரூபமாக இருக்கக் கூடிய பாலாவை அனுப்புகிறாள். ஞான விருத்தியில் இருக்கக்கூடிய தன்னுடைய குழந்தை பாலாவை அனுப்புகிறாள். இங்குதான் பாலா திரிபுரசுந்தரி
வருகிறாள்.
பாலாதிரிபுரசுந்தரி எப்படி வருகிறாள்?
பாலாதிரிபுரசுந்தரி சிறிய ரதத்தில் வருகிறாள். இதற்கு முன்பு அம்பாளினுடைய ரதமானது ஸ்ரீ சக்ர ராஜ ரதம் என்று பார்த்தோம். மந்த்ரிணீ என்கிற மாதங்கியினுடையது கேய சக்ர ராஜரதம் என்று பார்த்தோம். வாராஹியினுடைய சக்ரம் கிரீ சக்ர ராஜரதம் என்று பார்த்தோம். இங்கு பாலா சின்ன குழந்தை. அந்த சின்ன குழந்தைக்கு சின்ன ரதம் இருக்கிறது. அந்த சிறிய ரதத்திற்குப் பெயர் கர்ணீ ரதம் என்பதாகும். லலிதோபாக்கியனத்தில் பாலா வரும்போது எந்த ரதத்தில் வருகிறாள் என்று சொல் கிறாள். அப்படிச் சொல்லும்போது, அந்த ரதத்திற்கு கர்ணீ என்று பெயர் கொடுக்கிறது. கர்ணீ ரதமென்றால் என்ன? எதற்கு பாலா கர்ணீ ரதத்தில் வருகிறாள். இந்த கர்ணீரதத்தில் வந்துதானே முப்பது பண்ட புத்திரர்களை வதம் செய்கிறாள்.
இந்த கர்ணீ ரதமானது நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கின்றது என்பதை பார்ப்பதற்கு முன்னால், இன்னொரு விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் கவனமாக மெதுவாக நகர்வோம். அப்போதுதான் இந்த அஞ்ஞான விருத்திகளை அம்பிகை எப்படியெல்லாம் சம்ஹாரம் செய்கிறாள் என்பது புரியும். இந்த முப்பது பண்ட புத்திரர்கள் என்று நாம் சொன்னோம் அல்லவா… ஏற்கனவே இந்த முப்பது என்பதற்கு தச இந்திரியங்கள் வழியே செயல்படுவதைக் கொண்டு விளக்கமாக சொல்லிவிட்டோம். ஆனால், இதையும் மீறி இன்னொரு சூட்சுமமான விஷயத்தையும் நாம் பார்க்கலாம். ஒரு நாள் என்பதை எடுத்துக் கொண்டால், மொத்தம் அறுபது நாழிகை வரும். ஒரு நாளினுடைய பகல் வேளை என்பது முப்பது நாழிகை. இரவு என்பது முப்பது நாழிகை. அதற்கடுத்து ஒரு மாதம் என்பது நம்முடைய சம்பிரதாயப்படி முப்பது நாள்தான்.
பன்னிரண்டு மாதம்தான். மொத்தம் முன்னூற்று அறுபது நாட்கள்தான் ஒரு வருடக் கணக்கு. 364, 365, 366 போன்ற கணக்குகளெல்லாம் நமக்கு கிடையாது. அதேபோல, இரண்டு பட்சங்களையும் அதாவது வளர்பிறை தேய்பிறை சேர்த்தால் பதினைந்தும் பதினைந்தும் முப்பது நாட்கள் வந்து விடும். இப்படி நாம் சொல்லுகின்ற இந்த காலக்கணக்குகள் எல்லாவற்றையுமே முப்பது முப்பதாக வைத்திருக்கிறோம். நாழிகை, மாதம், பட்சங்கள் எல்லாமுமே முப்பதாகத்தான் இருக்கின்றன. இப்போது மீண்டும் விஷயத்திற்குள் வருவோம். பகவான் கால சொரூபியாக இருக்கிறான். பகவான் மகா காலனாக இருக்கிறான். அம்பாள் மகாகாளியாக இருக்கிறாள். அப்படிப் பார்க்கும்போது, காலம் – time என்பது பகவத் சொரூபம்.
ஆனால், நம்முடைய அஞ்ஞானம் என்ன செய்கிறதெனில், இந்த பகவத் சொரூபமான இந்த காலம், மகாகாளத்தை நாம் பார்க்க விடாமல், நம்மை குறிப்பிட்ட limitக்குள், ஒரு காலத்திற்குள் நம்மை fragment செய்து விடுகின்றது. இப்போது பாருங்கள், காலையில் ஒரு முப்பது நாழிகை. ஒரு fragmentation. இரவு ஒரு முப்பது நாழிகை. ஒரு fragmentation. இப்படி நாள், மாதம் என்று சொல்லிச் சொல்லி கடந்த காலம் (past), நிகழ்காலம் (present), எதிர்காலம் (future) என்று எப்படி காலம் பிளவுபடுத்துவதை பாருங்கள். இந்த காலத்தை fragment பண்ணக் கூடியது எதுவெனில் அஞ்ஞானம் அல்லவா? இப்படி அஞ்ஞானத்தால் வந்த, இந்த காலத்தால் வந்த முப்பது முப்பதாக வந்த fragmention தான் முப்பது பண்ட புத்திரர்களாக வந்து நிற்கின்றது. இந்த காலத்தினுடைய fragmention ஐதான் அம்பாள் அங்கு எடுக்கிறாள்.
அதாவது, பாலா திரிபுரசுந்தரி காலத்தையே முடிவுக்கு கொண்டு வருகிறாள். இதைத்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி, ending of time என்று அடிக்கடி குறிப்பிடுகிறார். Sir, can you end the time now என்றும், time is disorder என்றும், time breeds disorder, time is the invention of thought என்று இந்த நேரம் என்பது எத்தனை தூரம் அஞ்ஞான விருத்தியை அளிக்கும் என்பது குறித்து நிறைய பேசியுள்ளார்.
இப்படி fragmeted ஆக இருக்கும், time அல்லது காலத்திற்குள் இந்த முப்பது பண்ட புத்திரர்களும் கட்டுப்படுத்தி நம்மை limited ஆக தளைக்கு உட்படுத்துகிறார்கள். இப்போது மேலே சொன்ன இந்திரியங்கள், கர்மா செயல்படும் விதம் எல்லாவற்றையும் மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்தமாகக் கொண்டு வந்தால், அவையே இந்த முப்பது பண்ட புத்திரர்களாக நம்மிடத்தில் அஞ்ஞான விருத்திகளாக இருக்கிறார்கள். அவர்களை அழிக்கவே அம்பாள் பாலாவை அனுப்பி வைக்கிறாள். ஏனெனில்,
அம்பிகையை பொறுத்தளவில் பிரம்மாண்டத்தை பொறுத்தளவில் மிகவும் சிறியது. அதனால், என்னுடைய குழந்தையே போதும் அதுவே அழித்துவிடும் என்று சொல்லி பாலாவை அனுப்புகிறாள்.
அப்படி அனுப்பும்போது பாலா எதில் வருகிறாள் எனில், கர்ணீ என்கிற ரதத்தில் வருகிறாள். கர்ணீ ரதம் என்பதற்கு ஒரு விசேஷம் உண்டு. கர்ணம் என்றால் காது. கர்ணீ ரதத்தில் அம்பாள் வருகிறாள்
என்பது எதைக் காண்பித்துக் கொடுக்கிறது தெரியுமா? எப்போது குருநாதர் இந்த சாதகருடைய காதில் பாலா மந்திரத்தை உபதேசம் செய்கிறாரோ அங்கு ending of time நடக்கிறது. என்றைக்கு குருநாதர் வாக்கிலிருந்து நம்முடைய காதுக்கு பாலா மந்திரத்தின் மூன்று அட்சரங்கள் வருகின்றதோ அப்போதே காலம் முடிந்து போகிறது. அதற்குப் பிறகு நாம் சாதனை செய்கிறோம் என்பதெல்லாம் வேறு விஷயம். குருநாதருடைய வாக்கிலிருந்து மூன்று அட்சரங்கள் நம் காதுகளுக்கு போய்விட்டதா அவ்வளவுதான்.
அதுதான் முக்கியம். அதனால்தான் அம்பாள் கர்ணீ ரதத்தில் வருகிறாள். அங்கு பாலா வரக்கூடிய ரதம் எதுவென்றால் காதுதான். நம்முடைய காதுதான் அம்பாளினுடைய ரதம். ஜே.கே.சொல்லும் listening transformation என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. தாயுமானவர் சுவாமிகள்கூட,
“மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாயத் தொடங்கினர்க்கு ஓர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே’’
– என்கிறார். இந்த ஒரு முக்கியமான நிகழ்வானது எல்லா மகான்களின் வாழ்க்கையிலும் நடந்திருப்பதை பார்க்கலாம். பாலா வினுடைய மூன்று அட்சரங்களும் காதில் சென்றவுடனே என்ன ஆகுமென்று தெரியுமா? ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் முடிந்துப் போகும். வாக்கு சரீரம் மனசு வழியாக வரக்கூடிய அஞ்ஞான விருத்திகள் முடிந்து போகும். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் முடிந்தது. எல்லா பண்ட புத்திரர்களையும் அழித்து விடுகிறாள் பாலா திரிபுரசுந்தரி. காலத்தை முடித்து விடுகிறாள். Time ends. மூன்றோ, முப்பது, முன்னூறோ எத்தனை அஞ்ஞான விருத்திகளாக இருக்கட்டும் இந்த மூன்று அட்சரங்களும் போனால் அவ்வளவுதான் எல்லாமும் முடிந்து போகும்.
இப்போது நாமாவைப் பாருங்கள்.
பண்டபுத்ர வதோயுக்த பாலா விக்ரம நந்திதா… அதுவும் எப்படியெனில் பாலா விக்ரம நந்திதா… விக்ரமம் என்கிற வார்த்தைக்கு பராக்கிரமம் என்றொரு அர்த்தம் உண்டு. பாலாவின் பராக்கிரமத்தைப் பார்த்து அம்பாள் சந்தோஷப்படுகிறாள் என்பது ஒரு அர்த்தம். இன்னொன்று இந்த விக்ரம என்பதற்கு measuring என்றும் இன்னொரு அர்த்தம் உண்டு. அதனால்தான், வாமன ரூபத்தில் பாலகனாக பெருமாள் சின்ன பையனாக வந்தார். சட்டென்று திரிவிக்ரமனாக உயர்ந்து மூன்று உலகத்தையும் அளந்தார் அல்லவா? இங்கு பாலா ஒன்பது வயதுக் குழந்தையாக வருவாள். வந்துவிட்டு திரிவிக்ரமனாக பெருமாள் அளந்தாரோ அதுபோல எல்லாவற்றையும் அளந்து எல்லா அஞ்ஞான விருத்திகளை பூராவும் அழித்து விக்ரம சொரூபமாக நமக்குக் காட்சி தருவாள்.
அதனால்தான் வித்யாவில் சொல்லக் கூடிய ஒரு விஷயம் உண்டு. பாலா மந்திரம் ஜபிக்கும்போது அம்பாள் நம் மடியில் குழந்தையாக இருக்கும்படி தெரியும். அப்படியே வித்யாவில் பஞ்ச தசாக்ஷரி மந்திரத்திற்கு வரும்போது, அவர் ராஜராஜேஸ்வரி என்கிற அம்மாவாகவும், நாம் அவள் மடியில் குழந்தையாக இருக்கும் அனுபூதியும் கிட்டும். நாம்தான் அவள் மடியில் குழந்தையாக இருக்கிறோம் என்கிற உண்மை அப்போதுதான் தெரியும். முதலில் நம் மடியில்தான் அவள் குழந்தையாக இருக்கிறாள். உண்மையை கடைசியில் தெரிய வரும்போது நாம்தான் அவள் மடியில் குழந்தையாக இருக்கிறோம் என்பது. இதில் விசேஷம் என்னவெனில், தாயாகவும் அவளே இருக்கிறாள். சேயாகவும் அவளே
இருக்கிறாள்.
இந்த நாமாவிற்கும், நாம் மேலே பேசிய விஷயத்திற்கு பிரமாணமான தலத்தையும் சேர்த்தே பார்த்து விடுவோம். சென்ற நாமத்தில் திருக்கடையூர் அபிராமியையும், அமிர்தகடேஸ்வரரையும் பார்த்தோம். இப்போது திருக்கடையூரில் காலசம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்வோம் அல்லவா. அங்கு கால சம்ஹார மூர்த்தி என்பதே ending of time தானே. அந்த கால சம்ஹார மூர்த்திக்கு பக்கத்தில், அந்த கால சம்ஹார மூர்த்திகென்றே ஒரு அம்பாள் இருப்பாள். அந்த அம்பாளுக்கு பெயரென்ன தெரியுமா… பாலாம்பிகை.
இதற்கு முன்னால் இருக்கிற நாமாவில் திதி நித்யா தேவிகள் சுக்ல பட்சத்தை காண்பித்துக் கொடுத்தாள் அல்லவா! வளர்பிறையைக் காண்பித்துக் கொடுத்தாள் அல்லவா! இப்போது இந்த நாமாவில் இருக்கக் கூடிய பாலாவானவள் நமக்கு பௌர்ணமியை காண்பித்துக் கொடுக்கிறாள். ஏனெனில், பாலா உபாசனையே பௌர்ணமியில் செய்வதுதான் மிகவும் விசேஷம். இதற்கு முன்னால் உள்ள நாமா திதி நித்யா தேவதைகள் வளர் பிறையை காண்பித்துக் கொண்டே வந்தாள். அது பூரணமாகும்போது பௌர்ணமியாகும்போது அங்கு பாலா வந்து நிற்கிறாள். (சுழலும்)
ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா
The post காலத்திற்கு அப்பால் காட்டும் நாமம் appeared first on Dinakaran.