தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி!

அரியலூர்: தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அனைவரும், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க வேண்டும் என்றும், பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு தமிழக அரசின் உயர் மட்டக்குழு ஆய்வு செய்து நான்கு மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறிய நீதிமன்றம் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைக்க உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க, போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்படடது. இது தொடர்பாக மக்களிடம் தற்போது கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; அரசு பேருந்து கட்டணம் உயர்வு இருக்காது. நீதிமன்றம் அறிவுறுத்தல்படி தான் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. கட்டணத்தை உயர்த்தக்கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். அரசுப் பேருந்து கட்டணம் உயர்ந்தால்தான் தனியார் பஸ் கட்டணம் உயரும் என்பதால் நீதிமன்றம் சென்றனர். பேருந்து கட்டணம் தொடர்பான மக்களின் கருத்து நீதிமன்றத்தில்தான் சமர்ப்பிக்கப்படும். மக்களுக்கு சுமையை ஏற்படுத்தக் கூடாது என்றுதான் அரசு தரப்பில் வலியுறுத்தப்படும். ஏற்கனவே மின்கட்டண உயர்வு இருக்கும் என்ற செய்தி வந்தபோது கட்டணம் உயராது என்பதை தெளிவுபடுத்தினோம். இவ்வாறு கூறினார்.

The post தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி! appeared first on Dinakaran.

Related Stories: