திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் மருத்துவர் அறிவரசன் என்பவர் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில் கடந்த 2023-ம் ஆண்டு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த சத்யா, இந்திராணி, வரதன், அலசந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா, வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சேர்ந்த நர்மதா, பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெய்சீலி, பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆபிசூர் ரகுமான், உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த அனிதா, செங்கிலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் ஆகிய 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அடுத்த 6 மாதங்களில் நோய் தொற்று காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதில், கடைசியாக உயிரிழந்த நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணியின் மகன் ஸ்ரீராம்குமார் என்பவர் தனது தாயார் நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு, தனியார் பல் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தான் அவர் உயிரிழந்தார். மேலும், எனது தாயாரை போலவே நோய் தொற்று காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக கடந்த 2023-ம் ஆண்டு வாணியம்பாடி நகர காவல் நிலையம், சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழக முதல்வர் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு புகார் அளித் திருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் இது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கையை வெளியிட்டனர். அதில் மருத்துவ உபகரணங்கள் அசுத்தமாக இருந்ததே நோய் தொற்றுக்கு காரணம் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ஞான மீனாட்சி தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ஞான மீனாட்சி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
மூளை தொற்றால் 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக விளக்கமளிக்க பல் மருத்துவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மருத்துவர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லாத காரணத்தால் பல் மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளோம், மேலும் இது தொடர்பாக பல் மருத்துவ கவுன்சில்க்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளோம் என கூறினார்.
The post வாணியம்பாடியில் பல் சிகிச்சை பெற்ற 8 பேர் பலியான விவகாரத்தில் தனியார் மருத்துவமனைக்கு சீல் appeared first on Dinakaran.