வேளச்சேரி, ஜூன் 3: கோவிலம்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு பைக்கில் தப்பிய வாலிபர்களை, சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். கோவிலம்பாக்கம், சத்யா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (25). நேற்று முன்தினம் இரவு 8.45 மணி அளவில் அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், இவரது வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சத்தம்கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது குண்டு வீசியவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் கோவிலம்பாக்கம், சத்யா நகர் 9வது தெருவில் வசித்து வரும் மணிகண்டன் (26), சின்ன கோவிலம்பாக்கம், பஜனை கோயில் தெருவில் வசித்து வரும் குகன் (24) ஆகிய இருவர் வீட்டு வாசலிலும் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். பெட்ரோல் குண்டு வீசியபோது 3 வீடுகளிலுமே அனைவரும் வீட்டினுள் இருந்ததால் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்தபகுதியில் அடுத்தடுத்து 3 பேரின் வீடுகளை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட 3 பேரும் நேற்று மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள். 3 வீடுகளின் முன்பு ஒரே கும்பல்தான் பெட்ரோல் குண்டு வீசினார்களா, எதற்காக அப்படி செய்தனர் என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.
The post கோவிலம்பாக்கத்தில் பரபரப்பு அடுத்தடுத்து 3 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு: பைக்கில் தப்பிய மர்ம நபர்களுக்கு வலை சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.