வேலூர் கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம் சாலை விபத்தில் இறந்த

வேலூர் ஜூன் 3: வேலூர் அருகே சாலை விபத்தில் இறந்த வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு அடுத்த அரப்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி விமலா(50). இவர்களுக்கு விஜயசேகர்(25), சுரேந்தர்(23) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜ்குமார் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜயசேகர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சுரேந்தர் வேலூர் ஊரீசு கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சுரேந்தர், தனது பைக்கில் கடந்த 31ம் தேதி மதியம் ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். மேலகுப்பம் சாலை சந்திப்பில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வாகனத்தின் மீது சுரேந்தரின் பைக் மோதியது.

இந்த விபத்தில் சுரேந்தர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் சுரேந்தர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது தாய் விமலா முன்வந்தார். தொடர்ந்து சுரேந்தரின் இருதயம், நுரையீரல் ஆகியன அப்பல்லோ மருத்துவமனைக்கும், கல்லீரல், இடதுபுற சிறுநீரகம் மற்றும் கண்கள் சிஎம்சி மருத்துவமனை ராணிப்பேட்டை வளாகம் மற்றும் வேலூர் வளாகத்துக்கும், வலதுபுற சிறுநீரகம் சென்னை காளியப்பா மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

The post வேலூர் கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம் சாலை விபத்தில் இறந்த appeared first on Dinakaran.

Related Stories: